logo
மூட்டைக்கு ரூ.50  பிடித்தம் செய்யும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

மூட்டைக்கு ரூ.50 பிடித்தம் செய்யும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

09/Jul/2021 09:35:00

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் செலவுகளுக்காக எனக் கூறி மூட்டைக்கு ரூ.50 வரை பிடித்தம் செய்யப்படுவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமையில்  நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை தனியார் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிவிடக்கூடாது என்பதற்காக அரசால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்படுத்துகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் நூறு இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்நிலையங்களில் நிர்வாகச் செலவுக்கு எனக்கூறி எந்தவித ரசீதும் கொடுக்காமல் மூட்டைக்கு 50 ரூபாய் பிடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், சேதாரத்திற்காக மூட்டைக்கு 550 கிராம் நெல் மட்டுமே கூடுதலாக எடை வைக்க வேண்டும். ஆனால், கொள்முதல் நிலையங்களில் 2 கிலோ நெல் கூடுதலாக பிடித்தம் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, விவசாயிகளிடம் இப்படி அடாவடியாக பிடித்தம் செய்யும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து தவறிழைக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பிட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில செயலாளர் சாமி.நடராஜன் கலந்து கொண்டு  சங்கத்தின் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



Top