logo
புதுக்கோட்டையில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை: உரிய முன்னறிவிப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற மக்கள்

புதுக்கோட்டையில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை: உரிய முன்னறிவிப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற மக்கள்

09/Jul/2021 10:59:52

புதுக்கோட்டை, ஜூலை:  தடுப்பூசி தீர்ந்து போனதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ள  தகவல் தெரியாமல்   மையங்களுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரசாரம் காரணமாக  பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 528 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்  கடந்த 4 நாள்களாக  கோவாக்சின்‌ தடுப்பூசி இல்லாததால், இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான நாளிலும் அதைக்கடந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல்   பொதுமக்கள் காத்துக் கிடந்தனர். 

 இந்நிலையில், புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு  பொது மக்கள் நூற்றுக்கணக் கானோர் திரண்டு வந்தனர். ஆனால், கோவாக்சின் இரண்டாவது டோஸ் ஊசி 150 நபர்களுக்கு மட்டுமே போட்டப்பட்டது.

இதனால்  ஊசி போடக் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மறுநாள் தடுப்பூசி முகாம் நடைபெறும் எனக்கூறி  பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், வியாழக்கிழமை காலையில் வழக்கம் போல புதுக்கோட்டை டவுன்ஹாலில்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதாக பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் சென்றனர். புதன்கிழமை பிற்பகலில் தடுப்பூசி வந்துவிட்டதாகவும் இன்று ஊசிப போடப்படும் என அங்கிருந்த சிலர் கூறினராம். மூடப்பட்டிருந்த பிரதான கதவும் திறக்கப்பட்டதால் வாகனங்கள் உள்ளே சென்றன. இதனிடையே இன்று தடுப்பூசி போடப்படவில்லை என்று எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை வைத்தனர்.

கடந்த சிலமாதங்களுக்கு முன்  தடுப்பூசிகள் மக்களுக்காக காத்திருந்ததால் பல்வேறு பிரசார  வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும்  கொரோனாதடுப்பூசி திருவிழா நடத்தி விழிபு்ணர்வு ஏற்படுத்தப்பட்டது. அது நல்ல பலனைத்தந்ததால்தான் தற்போது  ஊசிக்காக  பொதுமக்கள் காத்திருக்கும் தலைகீழ் நிலைமை ஏற்பட்டுள்ளது.. 

 பொது மக்கள் தண்ணீர்வரி, சொத்து வரி செலுத்த வலியுறுத்தி  நகர்முழுவதும்  ஒலிபெருக்கி வாகனம் மூலம் அறிவித்து வருகின்ற நகராட்சி நிர்வாகம்  அதைப்போலவே, இந்தத்தகவலையும்  ஒலிபெருக்கி வாகனங்கள் மூலம் அறிவித்திருந்தால் இந்த வீண் அலைச்சலை தவிர்த்திருக்கலாமே என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

                                                                               

        


Top