logo
திருவாரூரில் ரூ.10.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாய்-சேய்  நலப்பிரிவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

திருவாரூரில் ரூ.10.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தாய்-சேய் நலப்பிரிவு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

08/Jul/2021 12:43:56

தஞ்சை, ஜூலை: திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தாய்- சேய் நலப்பிரிவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த ஊரான திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக (ஜூலை6)   சென்றார்.

திருவாரூர் சென்றபின்  மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை  முதல்வர் ஆய்வு செய்து, அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் மற்றும் சாகுபடி குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து திருவாரூர் சந்நிதி  தெருவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு சென்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, புதன்கிழமை  காலை காட்டுரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உடனிருந்தனர். 

இதனைத்தொடர்ந்து திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு 70 ஆயிரம் சதுரடி பரப்பில் ரூ.10.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடம் (தாய் சேய் நலப்பிரிவு), 4 அறுவை சிகிச்சை மையங்களுக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என். நேரு, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திமுக மாவட்ட செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்  காயத்ரி கிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Top