logo
போக்சோ சட்டத்தை கடுமையாக்கியது மத்திய அரசு.

போக்சோ சட்டத்தை கடுமையாக்கியது மத்திய அரசு.

14/Mar/2020 04:32:11

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டத்தின் விதிகளை மேலும் கடுமையாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

 

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொண்டுள்ளதுமத்திய அரசு புதிய சட்டத்தின் கீழ், பள்ளிகள், காப்பகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அனைத்து விபரங்களும், போலீஸ் அதிகாரிகள் மூலம் சரி பார்க்கப்படும், குழந்தைகளின் ஆபாச பதிவுகள் பகிரப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

    குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை யாராவது பகிர்ந்தாலோ, சேமித்து வைத்திருந்தாலோ, அதை, சைபர் கிரைம் அல்லது சிறப்பு சிறார் போலீஸ் பிரிவிடம் புகார் அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சிறிதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை ஒன்றை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரடி தொடர்புடைய எல்லா நிறுவனங்களும் அந்த கொள்கையை பின்பற்ற வேண்டும். குழந்தைகளை கையாளும் பணியில் இருக்கும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், போக்சோ சட்டப்படி அவர்களது பொறுப்பு பற்றியும் உணர்த்த பயிற்சி வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும்.
   மேலும், குழந்தைகளுக்கு தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அத்தகைய குற்றங்களை தெரிவிப்பதற்கான குழந்தைகள் உதவி மைய கட்டணம் இல்லா தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும். அவரவர் வயதுக்கேற்ற பாடத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும் எனவும் போக்சோ சட்டத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

Top