logo
நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும்:  நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவிடம் எழுத்தாளரும் வழக்குரைஞருமான கோவை மு.ஆனந்தன் மனு

நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும்: நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவிடம் எழுத்தாளரும் வழக்குரைஞருமான கோவை மு.ஆனந்தன் மனு

24/Jun/2021 10:44:32

கோவை, ஜூன்: நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டுமென   நீதியரசர் .கே.ராஜன் தலைமையிலான உயர்நிலைக்கு குழுவுக்கு  எழுத்தாளரும் வழக்குரைஞருமான கோவை மு.ஆனந்தன் மனு அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள மனு விவரம்:  நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக எனது கருத்துகளைத் தங்கள் முன்பாக சமர்பிக்க விரும்புகிறேன்.

இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும்  பல் மருத்துவக் கவுன்சில் ஆகியவை நீட் தேர்வுகளை அறிமுகப்படுத்துவதற்காக     ஏற்கெனவே இருந்த மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் உயர்படிப்பு ஒழுங்குமுறைகளைத் திருத்தம் செய்து முறையே 21.12.2010 மற்றும் 31.5.2012 அன்று வெளியிட்ட  இரண்டு அறிவிப்பு ஆணைகள்     (Notification No. MCI-31(1)/2010-MED/49068  மற்றும் Notification No.MCI.18(1)/2010-MED/49070 ),  மருத்துவப் பட்டப்படிப்பு ஒழுங்குமுறைகள் திருத்தம் 2010 மற்றும் மருத்துவ உயர்படிப்பு ஒழுங்குமுறைகள் திருத்தம் 2010   ஆகியவற்றை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 

(வழக்கு எண்  T.C.(C) NO.98 OF 2012) அப்போதைய தலைமை நீதிபதி மாண்புமிகு அல்டாமஸ் கபீர் தலைமையில் மாண்புமிகு நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும்  அனில் தவே ஆகிய  மூன்று  நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. 

 2013 ஜூலை 18 அன்று  நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மருத்துவக் கவுன்சிலுக்கும் பல் மருத்துவக் கவுன்சிலுக்கும்  நீட் தேர்வு நடத்த அதிகாரமில்லை என்று தீர்ப்பு அளித்துவிட்டது.

 டி..பாய் வழக்கு 2002, இனாம்தார் வழக்கு 2005 மற்றும் பல முன் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை அளித்தார்கள். மாண்புமிகு  நீதிபதிகள் அல்டாமஸ் கபீர்  மற்றும்   விக்ரம்ஜித் சென்  ஆகியோர்  நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர்.  மாண்புமிகு  நீதிபதி அனில் தவே  மட்டும் நீட் தேர்வு சரி என்று மாறுபட்டத் தீர்ப்பை அளித்தார்.   

2002 -இல் டி..பாய் வழக்கில் 11 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு  அரசியலமைப்புச் சட்டப்படி அரசு உதவி பெறாத மற்றும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவர் சேர்க்கையினை அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது.

இதனை 2005 -இல் இனாம்தார் வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்ப்புகளின்படி இப்படியான கல்வி நிறுவனங்களின்  மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு இடங்களைத் தவிர (  Govt. Quota )  நிர்வாகத்தின் சொந்த இடங்களுக்கான ( Management Quota )  மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாது.

உச்சநீதிமன்றம் இனாம்தார் வழக்கில் அரசியலமைப்புச் சட்டப்படி,  தனியார் கல்வி நிறுவனங்களை இடஒதுக்கீடு அளிக்கச் சொல்வதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது.    எனவே இந்த நிலையைச் சரிப்படுத்த, தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வரும் வகையில் 93 -ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 2005 -இன் மூலம் பிரிவு 15 -இல் உட்பிரிவு ( 5) இணைக்கப்பட்டது.

 இதன் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியல்சாதி, பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வகுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.  ஆனால் இதில் தேர்வு நடத்தக்கூடிய அதிகாரம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்படவில்லை.

இந்தப் பிரச்னையை நீட் தேர்வுக்கு எதிரான கிருத்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்றம் ஆராய்ந்தது. அந்தத் தீர்ப்பில்  மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கு மருத்துவக் கவுன்சில் ஆலோசனை வழங்கலாம், நெறிமுறைகளை வகுக்கலாம்.  ஆனால் மருத்துவக் கவுன்சிலே நேரடியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்று முடிவு செய்துள்ளது. 

 இந்தத் தீர்ப்புக்கு எதிராக மருத்துவ கவுன்சில் 23.10.2013 அன்று சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தது. ( Review Petition (C) Nos.2159-2268 / 2013 &  Review Petition (C) NOS.2048-2157 OF 2013 ). மாண்புமிகு  நீதியரசன் அல்டாமஸ் கபீர்   அந்தச் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக  ஜூலை  2013   -இல்  ஓய்வு பெற்று விட்டார்.   23.10.2013 -இல் சீராய்வு மனு தாக்கல் செய்த பிறகு மாண்புமிகு நீதிபதி விக்ரம்ஜித் சென் அவர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக  பதவியில் இருந்தார்.  30/12/2015  அன்றுதான் ஓய்வு பெற்றார்.

அவர்  பதவியில் இருந்தபோதே  அவரையும் மற்றொரு நீதிபதியான  மாண்புமிகு அனில் தவே மற்றும் வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைத்து இந்த வழக்கை விசாரித்திருக்கலாம்.  ஆனால் மாண்புமிகு நீதிபதி விக்ரம்ஜித் சென்   ஓய்வு பெறும் வரை  சீராய்வு மனுக்கள் விசாரணைக்காகப்  பட்டியலிடப்படவில்லை.  இரண்டு  ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

மாண்புமிகு நீதிபதி விக்ரம்ஜித்சென் 30.12.2015  அன்று ஓய்வு பெற்றவுடன்  வழக்கு பட்டியலிடப்பட்டு  நீட் வேண்டும் என ஏற்கெனவே மாறுபட்ட தீர்ப்பளித்த மாண்புமிகு நீதிபதி அனில் தவே  தலைமையில்  மூன்று நீதிபதிகள்  கொண்ட அமர்வு  அமைக்கப்படுகிறது. பிறகு  மாண்புமிகு  நீதிபதிகள் அணில் ஆர். தவே, .கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஆதர்ஷ் குமார் கோயல், ஆர்.பானுமதி ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய  அமர்வாக மாற்றப்படுகிறது.  இந்த அமர்வு 11.4.2016 அன்று   தீர்ப்பளிக்கிறது.

நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டப்படி சரியா இல்லையா ?  நீட் தேர்வு நடத்துவதற்கு மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்று எந்தத் தீர்ப்பும் அளிக்கவில்லை. நீட்டு செல்லாது என்று ஏற்கெனவே மாண்புமிகு நீதிபதி அல்டாமஸ்கபீர் அவர்கள் தலைமையிலான அமர்வு 19.07.2013 அன்று வழங்கிய தீர்ப்பில் தவறுகள் இருப்பதால் அந்தத் தீர்ப்பை திரும்பப் பெறுவதாக மட்டும் தீர்ப்பளிக்கிறது.   இந்த வழக்கை மீண்டும் புதிதாக ஒரு அமர்வு திரும்பவும் மறுவிசாரணை செய்யவேண்டும்  என்றும்  உத்தரவிட்டது.

 11.4.2016  அன்றைய தீர்ப்பில்  நீட் வழக்குகளை புதிய அமர்வு மீண்டும்  மறுவிசாரணை செய்ய வேண்டுமென்று சொல்ல ப்பட்டுள்ளது.  அதன் பிறகு  ஐந்து ஆண்டுகள் கடந்தும்  நீட் வழக்கை மறு விசாரணை செய்ய  புதிய அமர்வு அமைக்கப்பட வில்லை.

எனவே மேற்படி தீர்ப்புகளை தாங்கள் பரிசீலித்து  நீட் வழக்கை மறுவிசாரணை செய்ய   உச்சநீதிமன்றத்தில் புதிய அமர்வு உடனே அமைக்கபட வேண்டும் மற்றும்  அதன் இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்தியா முழுவதும்  நீட் தேர்வை நிறுத்திவைக்க வேண்டும் ஆகிய அம்சத்தையும் தங்கள் பரிதுரையில் இணைக்க வேண்டுகிறேன்.

நீட் தேர்வுகள் நடத்த மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை என மருத்துவக் கவுன்சில் சட்டத்தை மத்திய அரசு திருத்தவேண்டும் என  தங்கள் குழு  பரிதுரைக்க வேண்டுகிறேன்.

அதே போல் கல்வியை மத்தியப் பட்டியலிலிருந்து பழையபடி  மாநில பட்டியலுக்கு மாற்றும் வகையில்   அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தவேண்டும். அப்போதுதான் நிரந்தரத் தீர்வு ஏற்படும்.  ஆகவே இந்த அம்சங்களையும் பரிசீலித்து ஆணையம் தனது பரிந்துரையில் இணைத்துக்கொள்ள வேண்டுமென அதில்  வழக்குரைஞர், எழுத்தாளர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

 

Top