logo
மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கணினி கட்டணம் ரத்து செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை

மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கணினி கட்டணம் ரத்து செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை

20/Jun/2021 10:45:37

புதுக்கோட்டை, ஜூன்: மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கணினி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென   தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள்   முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் இணையவழியில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை வகித்தார்.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கொரோனா தொற்று காரணமாக இந்த கல்வி ஆண்டு (2021-22) பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழ்நிலையால், தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித் துறை மூலமாக புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டும்,

புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களிடம் உடனடியாக செல்ல வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் சென்னையில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கியும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோ வடிவில் நடைபெறும் கல்வி தொலைக்காட்சியையும் தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிப்பது.

நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமையாசிரியர்கள் பெரும் முயற்சி எடுப்பது. மிக ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் மேல்நிலை பிரிவில் கணினி பாடப்பிரிவு எடுத்து படிக்கும் போது அவர்கள் செலுத்தவேண்டிய கணினி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வழங்கும் செய்முறை பயிற்சி ஏடு கட்டணம் முழுமையும் ரத்து செய்ய வேண்டும்.

மேலும், புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஜீவானந்தம் என்பவரின்   தலைமை ஆசிரியர்கள்  விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிப்பது

மேல்நிலைப்பள்ளி களில் அவுட்சோர்சிங் மூலம் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு 15 மாதம் ஊதியத்தை பெற்று வழங்க மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் இருந்து கோரிய மேல்நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியலை இது நாள் வரை வழங்காமல் இருப்பதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த இணைவழி  ஆலோசனைக் கூட்டத்துக்கு கிழக்கு மண்டல செயலாளர் இளவரசு, மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுசரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், அறந்தாங்கி கல்வி மாவட்டத் தலைவர் தெய்வகனி, இலுப்பூர் கல்வி மாவட்டத் தலைவர் எட்வர்டு சகாயராஜ் மற்றும் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய கல்வி மாவட்டத்தை சார்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சுதந்திரன் நன்றி கூறினார்.

Top