logo
மருத்துவர், செவிலியர், மருத்துவமனை மீதான தாக்குதல்:  புதுக்கோட்டையில் தேசிய எதிர்ப்பு நாளை  கடைபிடித்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர்

மருத்துவர், செவிலியர், மருத்துவமனை மீதான தாக்குதல்: புதுக்கோட்டையில் தேசிய எதிர்ப்பு நாளை கடைபிடித்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர்

18/Jun/2021 12:15:13

புதுக்கோட்டை, ஜூன்: மருத்துவர், செவிலியர், மருத்துவமனை மீதான தாக்குதலைக்கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்க புதுக்கோட்டை கிளை சார்பில் வெள்ளிக்கிழமை தேசிய எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது.

கோரிக்கைகள்: கொரானா இரண்டாம் அலை அலை மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து மூன்றாம் அலை மிக மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய ஆபத்தான சூழலிலும் டாக்டர்கள், செவிலியர்கள், பிற மருத்துவ பணியாளர்கள் மக்கள் பணி செய்து வருகின்றனர்.

ஆனால் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனைகளை அஸ்ஸாம், உத்தரபிரதேசம், கர்நாடகா என பல மாநிலங்களில் தாக்குதல் நடத்துகின்றனர். கொரானா காலத்தில் இதுபோன்ற தாக்குதல் மிக அதிகமாக உள்ளது. இதனால், இளம் டாக்டர்கள்  பணியாற்ற செல்ல அச்சத்துடன் உள்ளனர்.

இந்தியாவில் 18 மாநிலங்களில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை இந்தியா அளவில் முழுமையாக அமல்படுத்தி, தாக்குதலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

மருத்துவர்கள், மருத்துவமனை தவறு செய்தால் அதனை மருத்துவத்துறையிலும், மாவட்ட ஆட்சியரிடமும், வேறு பல அமைப்புகளிடமும் புகார் செய்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து தாக்குதல் நடத்துவது ஆபத்தாக உள்ளது.

இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து 18.6.2021 -ஆம் தேதி அனைத்து டாக்டர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்தும், அரசுக்கு மனுக்கள் வழங்கியும் தேசிய எதிர்ப்பு தினமாக, காப்போரை காப்போம் என்ற முழக்கத்துடன் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென   இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படிஇந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை சார்பாக  புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள சங்க கட்டிட வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு சட்டையுடன் பேட்ஜ் அணிந்து, கொரோனா கால வழிகாட்டுதல்படி எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும்எந்தவொரு மருத்துவ சேவையும் தடைபடாமல் கருப்பு பேட்ஜ் அணிந்து  செயல்படுவதாகவும்  புதுக்கோட்டை கிளையின் தலைவர் டாக்டர் கே.ஹெச். சலீம், செயலாளர் டி.நவரெத்தினசாமி, பொருளாளர் எம். ராஜா ஆகியோர் தெரிவித்தனர். இதில், திரளான மருத்துவர்கள் பங்கேற்றனர்.

Top