logo
கொரோனா பாதித்த 520 பேருக்கு வீடுகளில் சிகிச்சை: சுகாதார பணிகள் இணை இயக்குனர் தகவல்

கொரோனா பாதித்த 520 பேருக்கு வீடுகளில் சிகிச்சை: சுகாதார பணிகள் இணை இயக்குனர் தகவல்

01/Oct/2020 03:37:10

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் ,மாநகராட்சி, சுகாதார துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு  தடுப்பு நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றனர். தற்போது மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில்  கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனை மையங்கள் மூலம் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் ஸ்கிரீனிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கொரோனா  பாதிக்கப்பட்ட வர்கள் இந்த  ஸ்கிரீனிங் மையத்திற்கு முதலில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு பி.பி ,சுகர் ,ஆக்சிஜன் அளவு உட்பட ஐந்து வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில் அறிகுறி இல்லாமல் வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு  வைரஸின் தன்மைக்கேற்ப வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 520 பேருக்கு வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பதற்காக அரசு சில வழிமுறைகளை வைத்துள்ளது. அதன்படி இருக்கும் வீடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் சவுண்டம்மாள்  கூறியதாவது: மாவட்டத்தில் வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்ட 520 பேருக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த ஏரியா நர்சுகள் சிகிச்சை பெறுபவர்கள் வீடுகளுக்குச் தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் சென்று பரிசோதித்து வருகின்றனர். மேலும் சுகாதார துறையினர் அவர்கள் வீடுகளுக்கு தினமும் போன் செய்து அவர்கள் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர். வீடுகளிலிருந்து சிகிச்சை அளிப்பதால் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது. பத்து நாட்களுக்குள் அவர்கள்  குணமடைந்து விடுகின்றனர் என்றார். 


Top