logo
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈரோட்டில்  பிளஸ்- 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈரோட்டில் பிளஸ்- 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

14/Jun/2021 07:02:49

ஈரோடு, ஜூன்: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஈரோட்டில்   பிளஸ்- 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள்  அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் ,கல்வி தொலைக்காட்சி வாட்ஸ்அப் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறையாததால் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த ஆண்டு இறுதி தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டன.

தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ்- 2 மதிப்பெண் மிக அவசியம் என்பதால் அந்த தேர்வை ரத்து செய்வது மட்டும் தாமதமானது. தற்போது அந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து அரசால் நியமிக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது.

அதைப்போல் எஸ்.எஸ்.எல்.சி முடித்த மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு செல்வதற்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். ஆனால் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக  9-ஆம்  வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 சேர்க்கை நடத்தலாம் என அரசு அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது. கொரோனா தொற்றுப் பாதிப்பை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதற்காக இன்று காலையிலேயே தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.

பள்ளியின் நுழைவாயிலருகே  அனைவரது கைகளிலும் சானிடைசர் தெளிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். மேலும் அவர்களுக்குப் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் இருக்கைகள் தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்தது.

முதல்நாளில்  அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பிளஸ்-1 சேர்க்கைக்கான அழைப்பு விடுக்கப்பட் டிருந்தது. பின்னர் மற்ற பள்ளிகளில் இருந்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சேர விரும்பும் மாணவர்களுக்கான  சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. முதல் நாள் என்பதால் குறைந்த எண்ணிக்கையில்  மாணவ மாணவிகளே வந்திருந்தனர்.

Top