logo
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

11/Jun/2021 08:30:47

 

வங்கக் கடலில் வடக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இன்று(11.6.2021) உருவாகும்  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதே நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக சிதம்பரத்தில் 110 மிமீ மழை பெய்துள்ளது. பரமக்குடியில் 100 மிமீ, புதுக்கோட்டை 60 மிமீ, கொள்ளிடம் 50 மிமீ, உதகமண்டலம் 40 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

சென்னையில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்துள்ள நிலையில் இன்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், வடக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

அதனால் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் 13-ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். மேலும் மத்திய வங்கக் கடல் பகுதியிலும் பலத்த காற்று வீசும்.

அதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும், கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளிலும் 13-ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதாலும் அந்த  பகுதிகளுக்கு மீனவர்கள செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Top