logo
புதுக்கோட்டையின் பெருமை..எளிமையின் அடையாளம் முன்னாள் அமைச்சர் காட்டுப்பட்டி இராமையா....

புதுக்கோட்டையின் பெருமை..எளிமையின் அடையாளம் முன்னாள் அமைச்சர் காட்டுப்பட்டி இராமையா....

02/Jun/2021 11:06:17

புதுக்கோட்டை, ஜூன் புதுக்கோட்டை மாவட்டத்தின்  பெருமை..எளிமையின் அடையாளம் முன்னாள் அமைச்சர் காட்டுப்பட்டி இராமையாவை  அவரது  101 -ஆவது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே உள்ள ஒரு குக்கிராமம் காட்டுப்பட்டி.1957லிருந்து 1967 வரை தமிழகத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்.

பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, மின் துறை மற்றும் உணவுத் துறைகளின் அமைச்சராக  இருந்த இந்த ஊரைச் சேர்ந்த  வெ.இராமையா தன் பெயருக்கு முன்னால் தன் ஊர் பெயரை அடையாளப்படுத்திக் கொண்டதே காரணம்.

மலேசியாவின் ஜோர் பாக் என்ற ஊரில் பெருவணிகம் செய்த வெள்ளைச்சாமியின் புதல்வர்களில் ஒருவர் இராமையா. வசதியான குடும்பமானதால் பட்டப்படிப்பு படிக்க சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுகிறார் இராமையா.

அந்த காலக்கட்டத்தில் பெருமளவு அரசியல் தலைவர்கள் உருவான இடம் அண்ணாமலை பல்கலைக்கழகம். பிஏ- படித்ததோடு தேசிய தோழர்களுடன் ஏற்பட்ட நெருக்கம் காங்கிரஸ் கட்சியின் மீதும் சுதந்திர போராட்டத்தின் மீதும் இளைஞர் இராமையாவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

பையன் இங்கே இருந்தால் சரியாக வராது என்று முடிவு செய்த அவரது தந்தை வெள்ளைச்சாமி  அவரின் மற்ற புதல்வர்களும் லண்டனுக்கு பாரிஸ்டர் பட்டம் பெற இராமையாவை தயார் செய்தனர்.இரண்டாம் உலகப் போர் துவங்கியதால் இராமையாவின் லண்டன் பயணம் தடைபட்டது.

குடும்பத்தினரின் கட்டாயத்தால் சட்டம் படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார் இராமையா.அவருடைய விதியா அவரின் சுதந்திர போராட்ட உணர்வா தெரியவில்லை. கல்லூரி அவரின் சுதந்திர போராட்ட ஈடுபாட்டை சுட்டி காட்டி வீட்டுக்கு அனுப்பியதுதிரும்பிய இராமையா புதுக்கோட்டையில் வீடு பிடித்து தங்கினார்.

திரும்பிய பக்கமெல்லாம் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து மிக வலிமையான அமைப்பை உருவாக்கினார். பெருந்தலைவர் காமராஜரின் நட்பு கிடைத்தது.1948 -இல் இந்திய அரசியல் சாசனக் குழுவிற்கு உறுப்பினராக பெருந்தலைவர் காமராஜரின் பரிந்துரையால் நியமிக்கப்படுகிறார்.1948 முதல் 1952 வரை பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிந்து இந்திய அரசியல் சாசனம் உருவாக்கத்தில் அரும்பணி ஆற்றினார்.

1952 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு நீதிக்கட்சி வேட்பாளரிடம்  தோல்வியுற்றார்.அந்த வருடமே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.1953 -இல் பெரியநாயகியை வாழ்க்கைத் துணையாக கரம்பிடித்தார். 1957-இல் திருமயம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பெருந்தலைவரின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சரானார்.

மீண்டும் 1962 -இல் திருமயம் சட்டமன்ற தொகுதியில் வென்று தமிழகத்தின் பொதுப்பணி மற்றும் உணவுத் துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானவுடன்  தமிழக முதல்வர் ஆகிறார் இராமையா என்று பத்திரிகைகள் செய்தி எழுதின. காரணம் இளைஞர், அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர் என கூறப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் பெரியவர் பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்கியது.

பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த போது திருச்சி  பெல மற்றும் ஏராளமான அணைக்கட்டுகள் உருவாக காரணமாக இருந்தார். 1967 -இல் திருமயம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.   1972 -இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.1975 -இல் எமர்ஜென்சியின் போது  இந்திரா காந்தி அவர்களால் தமிழக திட்ட கமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.அந்த ஒன்றரை ஆண்டுகள் மிகக் கடுமையாக ஓய்வின்றி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பணியாற்றினார்.

 இந்திராகாந்தியின்  நம்பிக்கையை பெற்றார்.மத்திய அரசின் விவசாய அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அகதிகள் மறுவாழ்வு உயர்மட்ட குழுக்களிலும் அகதிகள் மறுவாழ்வு வங்கி( Repco Bank) இயக்குனராகவும் உன்னதமாக செயலாற்றி இருக்கிறார்.1977 -இல் சென்னையில் காலமானார்.

எளிமையின் அடையாளமாக இருந்தார்.நேர்மையாக வாழ்ந்தார்.ஆளுமை மிக்கவராக இருந்தார். ஒரு முறை புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகவும்,திருமயம் சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்று பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் முக்கிய துறைகளின் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் இராமையா.

அவருக்குப் பிறகு அவர் அண்ணன் மகன் கே.சுந்தரராசன் இரண்டு முறை திருமயம் சட்டமன்ற உறுப்பினராகவும் மூன்று முறை புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து அவரும் எளிய மக்கள் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்தார்.

1.6.2021 அவரது  101 -ஆவது பிறந்த நாள் விழா நாயகர் காட்டுப்பட்டி இராமையாவுக்கு பொன்னமராவதி நகர் காங்கிரஸ் தலைவர்  எஸ்.பழனியப்பன் ஏற்பாட்டில் புதுக்கோட்டை  தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் திருமயம்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராம.சுப்புராம் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள்தலைமையில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

 

                                                  

        

Top