logo
பிற மாநிலங்களைப்  போல தமிழகத்திலும்  மாநில சாகித்ய அகாதெமி தொடங்க வேண்டும்:  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை

பிற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மாநில சாகித்ய அகாதெமி தொடங்க வேண்டும்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கோரிக்கை

31/May/2021 11:42:47

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்த தையொட்டி (1961-2021) வைர விழாவின் தொடக்க நிகழ்ச்சி  (28-5-2021) இணையவழியில் (ஜூம் செயலி) நடைபெற்றது.

விழாவுக்கு, பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எழுத்தாளர் பொன்னீலன், பெருமன்றத்தின் முதல் செயற் குழுவின் உறுப்பினர் எழுத்தாளர் மு. பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  பண் பாட்டு ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 

1. பிற மாநிலங்களில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டில் மாநில இலக்கிய அமைப்பு (மாநில சாகித்திய அகாதெமி) ஒன்றை தமிழ்நாடு அரசு நிறுவி ஆண்டு தோறும் சிறந்த இலக்கிய ஆளுமைகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். தற்போது புத்தாண்டின் போது இலக்கியத்தின் பல பிரிவுகளில் வழங்கப்படும் பரிசுகள் தொடர வேண்டும்.

2. தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்கு ‌புத்தகங்கள் வாங்கச் செய்வதற்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்து பதிப்பகங்கள் வளர்ச்சி அடைய உதவ வேண்டும். இதற்கான நூலக ஆணை நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும்.

3. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிகழ்ச்சிகளின்றி வறுமையில் வாடும் அனைத்துக் கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்.

4. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிரப்பப்‌படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை  விரைவில் நிரப்ப வேண்டும்.

5. கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக பல்கலைக்கழக மானியக் குழு முன்மொழிந்துள்ள நாற்பது விழுக்காடு இணைய வழிக் கல்வியை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எதிர்க்கிறது.

6.  ஒரு பட்டப் படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் ‌என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எதிர்க்கிறது.

7. மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ஒழிப்பு நிலைப்பாட் டை பெருமன்றம் வரவேற்கிறது.

8. தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்திலுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான, தவறான பகுதிகளை நீக்க வேண்டும். தொடர்ந்து ஓராண்டு முழுவதும் பல்வேறு வகையான நிகழ்ச்சி களை மாநிலம் முழுவதும் நடத்துவது, பொது முடக்கக் காலம் தொடரும் வரை இணையவழி யில் வைர விழா நிகழ்ச்சிகளை நடத்துவது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பொதுச் செயலாளர் முனைவர் இரா. காமராசு வரவேற்றுப் பேசினார். துணைப் பொதுச் செயலர் கவிஞர் ஹாமீம் முஸ்தபா விழாவைத் தொகுத்தளித்தார்.  மாநிலப் பொருளாளர் ப.பா. ரமணி நன்றி கூறினார்.

முன்னதாக கோவையில் இருந்து பதிவு செய்யப்பட்ட கொடியேற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெருமன்றத்தின் நிறுவனர் ப. ஜீவானந்தம் உள்ளிட்ட முன்னோடிகளுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான ஜவஹருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்து 250 பேர் இந்த ஜூம் செயலி வழியே பங்கேற்றனர். மேலும், முகநூல் பக்கம் மூலம் நேரலையும் செய்யப்பட்டது.



Top