logo
 மே.31 புகையிலை ஒழிப்பு தினம்..உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை புறக்கணிப்போம்

மே.31 புகையிலை ஒழிப்பு தினம்..உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை புறக்கணிப்போம்

31/May/2021 09:03:02

புகையிலை பொருட்கள் உபயோகத்தின் ஆபத்தை தீமைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் கொண்டு வரப்பட்ட தினமே, உலக புகையிலை ஒழிப்பு தினம்.

1988 -ஆம் ஆண்டு முதல் மே மாதம் 31 -ஆம் தேதி உலக புகையிலை இல்லாத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் புகையிலை உபயோகத்திற்கு எதிரான பிரசாரம் வலுவடைந்து வருகிறது. சிகரெட் உள்ளிட்ட புகையிலையை புகைப்பதைப் பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டு வந்தாலும் புகையிலை மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில், சுமார் 20 கோடிக்கும் மேலான மக்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பூதாகரமாக வளர்ந்து வரும் பிரச்சனை போதைப் பழக்கம். இது உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

புகையிலையில் அடங்கியுள்ள நச்சுப் பொருள்கள் எனப் பார்த்தால் மெல்லக் கூடிய வகையின் புகையிலையான பான்பராக், ஹான்ஸ், குட்கா, தம்பக் போன்றவைகளில் 300 வகையான நச்சுப் பொருள்கள் உள்ளன. பீடி, சிகரெட் போன்ற புகைக்கும் புகையிலையில் 4 ஆயிரம் வகையான நச்சுப் பொருள்கள் உள்ளன. இவற்றில் 200க்கும் மேற்பட்டவைகள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய நச்சுப் பொருள்கள் ஆகும்.

தீப்பெட்டியில் நெருப்பு வருவதற்கு உள்ள உரசும் பகுதியில் இருக்கும். ஹெக்ஸாமின், பெட்ரோலில் உள்ள நச்சுப்பொருளான நைட்ரோ பென்சீன், கழிவறையையும், தரையையும் சுத்தப்படுத்தும் திரவமான அமோனியா, பூச்சிக்கொல்லி மருந்தான பினாயில் கார் பேட்டரியில் பயன்படுத்தப்படும் திரவமான காட்மியம்.

 பெட்ரோலின் வாயுவான மீத்தேன், ஆல்கஹாலான எத்தனால், நகத்தில் ஏற்படும் பூச்சுகளை சுத்தப்படுத்தக் கூடிய திரவமான அசெட்டோன் ரசக்கற்பூரம் அந்துருண்டை என்று சொல்லக் கூடிய பூச்சிக்கொல்லி உருண்டையான நாப்தலின், மெழுகு தயாரிக்கப் பயன்படும் அமிலமான ஸ்டீரிக் அமிலம், பிளாஸ்டிக் பைப் தயாரிக்கப் பயன்படுத்தும் வினைல் குளோரைடு, பூச்சிக்கொல்லி மருந்தான டியல்ட்ரோன், வாகனங் களிலிருந்து வரக்கூடிய புகையான கார்பன் மோனாக்ஸைடு, விஷப் பொருளான ஆர்சனிக், ஹைட்ரஜன் சையனைடு, அடிமைப்படுத்துவதற்கு நிக்கோட்டின் உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் உள்ளன.

புகையிலையில் நிரோடின் என்ற அமைப்படுத்தும் பொருள், கஞ்சா, ஹஷிஷ் என்பவைகளை விட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்ததாகும். இந்தியாவில் புகையிலையால் ஓராண்டிற்கு சுமார் 12 லட்சம் பேர் பலியாகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு சுமார் 3,700 பேர் பலியாகிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் என ஓராண்டுக்குப் புகைப்பவர் களது நுரையீரல்களுக்கு 1,225 மி.மீ. அளவுக்கு தார் சென்று சேருகிறதாம். தாரில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன. அதில், 37 ரசாயனப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

வாய் குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் 90 சதவீதம் புகையிலை பழக்கத்தால் மட்டுமே வருகிறது. 20க்கும் மேற்பட்ட வயதிலிருந்து புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களில் 50 சதவீதத்தினர் இப்பழக்கம் தொடர்பான நோய்களால்தான் மரணம் அடைகிறார்கள். புகைப்பிடிப்பவர்களில் 89 சதவீதத்தினர் 18 வயதுக்குள் இந்த மோசமான பழக்கத்திற்கு அடிமை யாகிறார்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில், புகைப்பிடிப்போர் வாழ்நாளில் 22 முதல் 26 ஆண்டுகளை இழக்கின்றனர். 60 மி.கி.நிகோடினை ஒரே நேரத்தில் உட்கொண்டால் அது ஆரோக்கியமான மனிதனின் உயிரைப் போக்க போதுமானது. மனிதனின் உடல், ஆரோக்கியத்தை கெடுக்கும் புகையிலை உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களையும் வேரறுக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அனைவரும் உறுதியேற்போம்.

Top