logo
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, முட்டை விநியோகம் நிறுத்தம் ?

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, முட்டை விநியோகம் நிறுத்தம் ?

30/May/2021 08:55:12

புதுக்கோட்டை, மே:  கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த  ஆண்டில் மார்ச் 25-ஆம் தேதி முதல் அனைத்துப்பள்ளிகளும் மூடப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு போன்ற உணவு பொருட்களை வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை  அடிப்படையாக கொண்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் பொருள்களான அரிசி, பருப்பு போன்றவை அந்தந்தப் பள்ளிகளிலேயே நேரடியாக விநியோகிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து  அனைத்து மாணவர்களும், அவர்களது பள்ளிகளில் உலர்ப்பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் மாணவர்கள் வர முடியாதபட்சத்தில் பெற்றோரும் அந்தப் பொருள்களை வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் உலர் பொருள்களுடன் முட்டையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற   நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு  சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து  கடந்த ஆண்டு  செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டதுஅதாவது பள்ளிகள் திறக்கப்படும் வரை முட்டைகளை வழங்க அரசு ஏற்பாடு செய்தது.

கொரோனா பரவல் காரண மாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி பயனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களுடன், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் வரை ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 முட்டைகள் வழங்கவும்  பள்ளிகளுக்கு மாணவர்கள் அவ்வப்போது வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் 6 முட்டைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஏப்ரல் மாதம் வரை சத்துணவு மாணவர்களுக்கு  5 கிலோ அரிசி, பருப்பு 1 கிலோ, 6 முட்டை ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா  ஊடரங்கு காலத்தில்   உதவிகரமாக இருந்து வந்தது. ஆனால்  மே மாதத்துக்கான இந்தப் பொருள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என பெற்றோர்கள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட  நிர்வாகம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக  உள்ளது.

Top