logo
காணாமல் போன மரகதலிங்கம் சிலை தொடர்பான வழக்கில் போலீஸார் மீண்டும் விசாரணை

காணாமல் போன மரகதலிங்கம் சிலை தொடர்பான வழக்கில் போலீஸார் மீண்டும் விசாரணை

30/Sep/2020 01:07:17

மதுரையில் காணாமல் போன பச்சைக்கல் மரகத லிங்கம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக  சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் நேற்று(செப்-29)விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே இருந்த பழமையான குன்னத்தூர் சத்திரத்தில், இரண்டரை அடி உயர பச்சைக்கல் மரகதலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.  கடந்த 2006 -இல் இந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அப்போது சத்திரத்தில் இருந்த மரகதலிங்கம் உள்ளிட்ட பொருள்கள், ராணி மங்கம்மாள் சத்திரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. பின்னர் ராணி மங்கம்மாள் சத்திரம் புதுப்பிக்கும் பணி தொடங்கிய போது, மரகதலிங்கம் உள்ளிட்ட பொருள்கள் மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், மாநகராட்சி கருவூலத்தில் இருந்த மரகதலிங்கம் காணாமல் போய்விட்டடாதாக மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் 2013- இல் மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்குமார் புகார் அளித்தார். மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.  உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.  2013 -ஆம் ஆண்டு, அப்போதைய மாநகராட்சி உதவி ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அதன் பிறகு மரகதலிங்கம் தொடர்பாக எந்த  தகவலும் வெளியாகவில்லை.

 இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் காணாமல் போன மரகதலிங்கம் தொடர்பாக நேற்று மதுரையில் விசாரணை நடத்தினர்  வழக்கின் புகார்தாரரான முத்துக்குமாரிடம், காணாமல் போன மரகதலிங்கம் மற்றும் குன்னத்தூர் சத்திரத்தில் இருந்த பழமை வாய்ந்த பொருள்கள் தொடர்பாக விசாரித்தனர். மாநகராட்சி அலுவலகத்தில் விசாரிக்க அனுமதிக் கடிதம் இல்லாததால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தவில்லை.

முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், மரகதலிங்க சிலை ஒன்றை மீட்டனர். அந்த மரகதலிங்கத்தை யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்பதால், மதுரையில் காணாமல் போன மரகத லிங்கமாக இருக்கலாம் என்ற அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதாகவும்  கூறப்படுகிறது.

Top