logo
ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கு இலவசமாக முடிதிருத்தும் தொழிலாளியின் நெகிழவைக்கும் சேவை.

ஆதரவற்றோர், ஊனமுற்றோருக்கு இலவசமாக முடிதிருத்தும் தொழிலாளியின் நெகிழவைக்கும் சேவை.

11/Mar/2020 05:48:53

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆதரவற்ற முதியோர்கள்,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,  ஊனமுற்றவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறார் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர்.

 ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை கீழப்பட்டியைச் சேர்ந்தவர் பி.லெட்சுமணன்(43). இவர், மாங்கோட்டையி்ல் முடிதிருத்தும் கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு வரும் ஆதரவற்ற முதியவர்கள், ஊனமுற்றவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்துவருகிறார். மேலும், வயது முதிர்வால் நடக்க முடியாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று இலவசமாக முடிதிருத்தம் செய்து வருகிறார். அவரை அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டிவருகின்றனர்.

  இதுகுறித்து லெட்சுமணன் நம்மிடம் கூறியது: மாங்கோட்டை எனது சொந்த ஊர். எனக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.நான் ஆலங்குடியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தேன். அதில், கிடைத்த குறைந்த தொகையை வைத்து எனது குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நான் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றேன். அங்கு சென்ற சில மாதங்களில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், மலேசியாவில் இருந்து ஊருக்கு திரும்பினேன். வெளிநாடு செல்ல வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமலும், அன்றாடம் குடும்பத்தை நடத்த முடியாமலும் தவித்துவந்தேன். அப்போது, நண்பர்கள், முகம்தெரிந்தவர்கள் உதவியை நாடியபோது, அவர்கள் மாங்கோட்டையிலே சலூன் கடை வைக்க உதவினர். நான் வெளிநாட்டில் உடல் நலக்குறைவால் வேலை பார்க்க முடியாமல் இருந்தபோது, உதவிக்கு ஆள் இல்லாமல் தடுமாறியதும், ஊருக்கு திரும்பிய பின்னர், நண்பர்கள் உதவி செய்து, அதன்மூலம் கடை வைத்த அனுபவமும், எனக்குள் உதவி என்பதன் அவசியத்தை புரியவைத்தது. பின்னர், நாம் வாழும் வாழ்க்கையில், நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.அதனால், ஆதரவற்றோருக்கும், ஊனமுற்றோருக்கும் இலவசமாக முடிதிருத்தம் செய்துவருகிறேன். இந்த கடை மூலம் எனக்கு குறைந்த அளவே வருமானம் கிடைத்தாலும், பிறருக்கு உதவி செய்கிறோம் என்ற மனநிறைவோடு வாழ்ந்து வருகிறேன் என்றார் அவர்.

Top