logo
முழு ஊரடங்கு :காய்கறி, இறைச்சிக் கடைகளில் திரண்ட  மக்கள் கூட்டம்

முழு ஊரடங்கு :காய்கறி, இறைச்சிக் கடைகளில் திரண்ட மக்கள் கூட்டம்

22/May/2021 01:23:44

ஈரோடு, மே: நாளை(ஞாயிற்றுக்கிழமை) முழு முடக்கம் என்பதால் ஈரோட்டில் காய்கனி, இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொடர்ந்து தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வின்றி முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. காய்கறி மளிகை பலசரக்கு இறைச்சி கடைகள் மற்றும் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட்டு வந்தது. மற்ற அனைத்து வகையான கடைகள் மூடப்பட்டிருந்தன.

அம்மா உணவகங்கள், உணவகங்களில் மூன்று வேளையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சலில்  மட்டும் உணவு வழங்கப்பட்டு வந்தது. அதே போல,   பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் அத்தியாவசியமானபணிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் தளர்வின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தவாரம்  வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சனிக்கிழமை  காலை முதலே ஈரோடு ..சி பூங்காவில் பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.இதனால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.

இதேபோல் பல்வேறு பகுதியில் உள்ள மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சின்ன மார்க்கெட் உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதேபோன்று இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், மட்டன் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Top