29/Sep/2020 04:54:48
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநகர் பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. வைரஸ் வீரியம் அதிகரித்து இருப்பதால் தினமும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தொடக்கத்தில் குறைந்த அளவே வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை இருந்தது. இதையடுத்து வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுநேர கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதலில் 300 படுக்கைகள் இதற்காக தயார் படுத்தப்பட்டன. பின்னர் நாளாக நாளாக வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் தனியார் திருமண மண்டபங்கள் தனியார் பள்ளிக்கூடங்கள் , கல்லூரி போன்றவற்றில கொரோனா சிறப்பு வார்டாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு என்று தனியாக வார்டு ஒதுக்கப்பட்டு 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஞானக்கண் பிரேம் நவாஸ் கூறியதாவது:ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தனியாக வார்டு ஒதுக்கப்பட்டு 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது லேசான அறிகுறியுடன் 74 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூச்சுத் திணறலுடன் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா நோயாளிகளுக்கு மன நல மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்குத் தேவையான உணவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் அனைத்து விதமான சிகிச்சை முறைகள் தரமான முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது.இதுபோன்ற காரணங்களால் வைரசால் பாதித்தவர்கள் மிகச் சீக்கிரமாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இதற்காக மருத்துவர்கள் ,நர்ஸ்கள் இரவு பகல் பார்க்காமல் பொதுநல சேவையாக தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.இது மட்டுமல்லாமல் மற்ற அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
6 மாதங்களில் 1,670 பிரசவங்கள்:ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும். 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். இதைப்போல் பிரசவங்களும் அதிக அளவில் நடக்கும். ஏழை -நடுத்தர மக்கள் பிரசவங்கள் இங்குதான் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 6 மாத கால கட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் ஆயிரத்து 670 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் 815 சுகப்பிரசவமாகவும், 855 அறுவை சிகிச்சை மூலமும் பிரசவம் நடந்துள்ளன. கொரோனா காலகட்டத்திலும் மற்ற அனைத்து வகையான நோயாளிகளுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.