logo
கொரோனா நோயாளிகளுக்கு தன்னார்வலர்களின் உதவிக்கரம் நீட்டும் பணிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர்  தொடக்கி வைத்தனர்

கொரோனா நோயாளிகளுக்கு தன்னார்வலர்களின் உதவிக்கரம் நீட்டும் பணிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்

16/May/2021 08:12:49

 

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் நோயாயாளிகளின் சிகிச்சைக்கு உதவும்   வழிகாட்டுதல்களை வழங்கும் தன்னார்வலர்களின் பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை, ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் (16.5.2021) ஞாயிற்றுக்கிழமை  தொடக்கி வைத்தனர்.

 இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற  சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது:

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவத்துறையினர், காவல்துறையினர். வருவாய்த்துறையினர் பல்வேறு பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர்இதே போன்று நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களும் தாமாக  முன்வந்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 60 தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

மேலும் தன்னார்வலர்கள் தங்களுக்குரிய பணிகளை உணர்ந்தும், நோயாளிகளை அதிக நேரம் காத்திருப்பதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தவுடன் மருத்துவர்களை அணுகி உடனடியாக மருத்துவம னையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சத்தினை போக்கும் வகையில் செயலாற்ற வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை பிரிவு, சிகிச்சை அளிக்கப்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று நல்ல வழிகாட்டியாக செயல்பட வேண்டும். மேலும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு வெளியே வரமாலும் பார்த்து கொண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும்.

தமிழகத்திலேயே முன்னோடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் பணியாற்ற தன்னார்வலர்களை இணைத்துள்ளோம். இந்த நிகழ்வு  முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று இது போன்று தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தன்னார்வலர்களை இணைத்து மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் ரகுபதி.


சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கூறியதாவது:

தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை  முதலவர் மேற்கொண்டு வருகிறார். அந்த  வகையில் நான் அமைச்சராக பதவியேற்றவுடன் சென்னையில் என்எஸ்எஸ், என்சிசி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசியபோது தமிழத்தில் 4 லட்சம் நபர்கள் உள்ளதாக தெரிவித்தனர். இவர்களை மருத்துவத்துறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் கோவிட்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கிடையே இணைப்பு பாலமாக பயன்படுத்தலாம் என  ஆலோசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மாநில நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் உடனடியாக சென்னையில் இருந்து புதுக்கோட்டை வந்து  இதற்கான ஏற்பாடுகளை  செய்தார். அதனடிப்படையில் சனிக்கிழமை  அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்களின் பணி தொடக்கி வைக்கப்பட்டதுஅதைத்தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தன்னார்வலர்களின் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இது  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். கோவிட் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக பணியால் மனஅழுத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் கோவிட் நோயாளிகளை காப்பாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர், மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களை பலதரப்பட்ட பொதுமக்கள்  தொலைபேசியில் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களின் பணிகளில் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்காகவே தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதில்மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாநில நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top