logo
சுகாதாரம் கேள்விககுறியாகிவிட்ட சாலையோர துரித உணவகங்கள்...   உணவு பாதுகாப்புத் துறையினர் கண்காணிப்பார்களா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சுகாதாரம் கேள்விககுறியாகிவிட்ட சாலையோர துரித உணவகங்கள்... உணவு பாதுகாப்புத் துறையினர் கண்காணிப்பார்களா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

29/Sep/2020 08:28:01

by MOHANRAM புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாஸ்ட்புட் கலாசாரம்: பல்வேறு நோய் பரவலை  உருவாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஸ்ட்புட் (ஜங்க் புட்) உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள் புற்றீசல் போல அதிகரித்து வருகின்றன. இந்த உணவு கலாசாரத்தால் பல்வேறு நோய்களின் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தூசியைக்கூட பொருட்படுத்தாமல் சாலையோரம் வெளிப்புறத்தில் நின்று சாப்பிடும் கலாசாரம், பாரம்பரிய உணவிலிருந்து மாறுபட்ட சுவை உள்ளிட்டவைகளால் இன்றைய இளைஞர்களிடம் இந்த வகை உணவுக் கடைகள்  பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இருந்து வந்த இந்த வகைக்கடைகள் கடந்த சில ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பாஸ்ட்புட் உணவகங்களும், இவை தவிர, 500 -க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளும் பரவிக்கிடக்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் பாஸ்ட்புட் உணவில் சுவை ,வாசனைக்காக பல ரசாயனம் கலந்த பொருட்கள் கலக்கப்படுகின்றன. கடைகளில் விற்பனையாகாத  இறைச்சியும் இதில் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.. 

கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளும் இதன் சுவைக்கு மயங்கி இந்த உணவை தொடர்ந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற நிலையில் இருந்தாலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இந்த கடைகளை கண்டு கொள்வதில்லை. தற்போது அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. பாஸ்ட்புட் உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்

இதுகுறித்து அரசு சுகாதாரத்துறை அதிகாரிர் ஒருவர் கூறுகையில், நம்முடைய பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி பாஸ்ட்புட் உணவு வகைகளில் உள்ளது. இந்த உணவில் கலக்கப்படும் சைனீஸ் சால்ட், வெனிகர் உட்பட அனைத்தும் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனம் ஆகும். இதனால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், குடல் புண்வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும், சிறுவயதுமுதல் தொடர்ந்து சாப்பிடுவதால் ஆண்மைக்குறைபாடு, சர்க்கரை நோயயும்,. பெண்களுக்கு மலட்டுத்தன்மை, குழந்தை பேறு போன்ற பிரச்னை ஏற்படும். எனவே இந்த உணவை அறவே தவிர்க்க வேண்டும்என்றார்.. 

  .புதுக்கோட்டை நகரில் அங்கொன்றும்  இங்கொன்றுமாக  இருந்த (பாஸ்ட்புட்) துரித உணவகங்கள் இன்று சாலையோரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் பகல்,மதியம், இரவு நேரங்களில் நிறைந்து காணப்படுகிறது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து மகளிர் கல்லூரி செல்லும் பாதை, திலகர்திடல் தொடங்கி பிருந்தாவனம் வரை, மச்சுவாடி,  மருத்துவக்கல்லுரிக்கு செல்லும் பாதைகளில் கடைகள் இயங்கி வருகின்றன. உணவு தயாரிக்கும்போது  வெளியாகும்  ஒரு விதமான நெடி  அந்த வழியாக கடந்து செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இக்கடைகள் பெரும்பாலும் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்திதான் உணவு தயாரிக்கின்றன. சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி எற்படுகிறது. இதில் ஒரு சிறு தவறு நடந்தாலும் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க என்ன  செய்யப்பட்டிருக்கிறது அதேநேரத்தில் இந்த உணவுகளின் தரம் எப்படியுள்ளது என்பது பற்றி ஏதேனும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா? இந்த உணவுகளை இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்கிறார்கள். புகார் வந்தால்தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென்பதில்லை. மக்கள் நலன்கருதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தரமாக உணவு தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உணர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் செயல்பட வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சாலையில்போகும் வாகனங்களால் ஏற்படும் தூசிகள் உணவில் போய் படியக்கூடியவகையில்தான் எல்லா கடைகளும் திறந்த நிலையிலேயே இருக்கின்றன. இவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அபாயம் உள்ளது .சாலையின் ஓரங்களில்  தயாரிக்கும்  இது போன்ற உணவுகளை  கடைகளின் உள்ளே பாதுகாப்பாகத் தயாரித்து பொது மக்களுக்கு  விற்பனை செய்வதையும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.  கொரானா வைரஸ் தாக்குதலைத் தடுப்பது குறித்து எந்த நேரமமும் யோசித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், இதுபோன்ற உணவகங்களையும் உரிய வகையில் கண்காணிப்பது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.      


 

Top