logo
கோயில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் கோவில் பூசாரிகள் நலச்சங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: மாநிலத்தலைவர் பி. வாசு அறிக்கை

கோயில் நிர்வாகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைக்கும் கோவில் பூசாரிகள் நலச்சங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: மாநிலத்தலைவர் பி. வாசு அறிக்கை

15/Apr/2021 05:41:08

சேலம், ஏப்:      தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் அனைத்திலிருந்தும் இந்து சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும் என ஒரு சில சுயநல சக்திகள் கூக்குரல் எழுப்பி வருகின்றன. அந்த சுயநல சக்திகளின் கோரிக்கைக்கும் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி. வாசு வெளியிட்ட அறிக்கை:

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் தான் தமிழகத்திலுள்ள  பெரிய மற்றும் சிறிய திருக்கோவில்கள் அனைத்தும் நிர்வாக ரீதியில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. திருக்கோவில்களுக்குச் சொந்தமான ஏராளமான நிலபுலன்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோவில்  வசம் வந்துள்ளன.

 அதுமட்டுமன்றி திருக்கோவில்களுக்குச் சொந்தமான கட்டடங்கள் கடைகள் புராதன சிலைகள் விலைமதிப்பற்ற நகைகள் போன்றவற்றின் விவரங்கள் கண்டறியப்பட்டு அவையெல்லாம் திருக்கோவில்களின் சொத்து விவரப் பட்டியலில் இடம்பெறச் செய்யப்பட்டன . விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் புராதன சிலைகள் அனைத்தும் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டன.

திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் திருக்குலத்தார் உள்ளிட்ட பல்வேறு வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும்  இருக்கின்ற சமத்துவ சூழ்நிலை உருவாக்கப்பட்டது .இதனால் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது . இதன் மூலம் சாதி பேதமற்ற சமத்துவ வழிபாடு திருக்கோவில் களில் நிலவி வருகிறது .அனைத்து சாதி மக்களும் எவ்வித பேதமும் இன்றி திருக்கோயில் களுக்குச் சென்று இறைவனை வழிபடும் உயர்வான நிலையும் நிலவி வருகிறது . அதற் கும் மேலாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.

இந்து சமய அறநிலைத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே திருக்கோயில்களுக்குச் சென்று வழிபடக்கூடிய நிலை இருந்து வந்தது . மற்றவர் களுக்கு குறிப்பாக திருக்குலத்தார் வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை. இதனால் சாதி சமய வேறுபாடு நீடித்து வந்தது. திருக்கோவில்கள் சொத்துக்கள் ஆக்கிரமிப் பாளர் இடம் சிக்கி அவற்றின் விவரமே தெரியாமல் இருந்து வந்தன.

இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பு பெரிய மற்றும் சிறிய திருக்கோவில்கள் அனைத்தும் ஜமீன்தார்கள் இடமும் தனிப்பட்ட செல்வாக்குமிக்க நபர்களிடமும் இருந்துவந்தனதிருக்கோவில்களை மனம் போன போக்கில் அவர்கள் நிர்வகித்து வந்தனர் .அவற்றின் சொத்துக்களையும் நிலங்கள் மற்றும் கடைகள் வீடுகள் ஆகியவற்றின் வருமானங்களையும் உண்டியல் வருவாய் பணத்தையும் அவர்கள் கணக்கில் காட்டாமல் செலவழித்து வந்தனர்.

தங்களது உறவினர்களையும் வேண்டப்பட்டவர்களையும் தங்களது விருப்பப்படி கோவில் நிர்வாகப் பணிகளுக்கு நியமனம் செய்து கொண்டனர். இதனால் திருக்கோவில் நிர்வாகம் சீர்கெட்டு கேட்பாரற்று அவல நிலையில் இருந்து வந்தது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில் களில் இருந்து அத்துறை வெளியேற வேண்டுமென கோரிக்கை விடுக்கும் சுயநல சக்திகள் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும் . அவ்வாறு வெளியேறினால் கோவில் சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் தனிப்பட்ட நிர்வாகிகளிடம் சிக்கி அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப திருக்கோவில் நிர்வாகம் செயல்படவேண்டிய அவல நிலை உருவாகி நூறாண்டு களுக்குப் பிந்தைய பழைய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே எக்காரணத்தைக் கொண்டும் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில் நிர்வாகத்திலிருந்து வெளியேறக் கூடாது. இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் ஒரு சில குற்றம் குறைகள் இருப்பதைத் தவிர்க்க இயலாது. குற்றம் குறைகள் இல்லாமல் எந்த நிர்வாகத்தையும் நடத்த இயலாது.

இந்து சமய அறநிலை துறை நிர்வாகத்தில் அவ்வாறு குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள சட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளதுசட்டரீதியில் குற்றம் குற்றம் குறைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத் தை அணுகவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .

குற்றம் குறைகள் இருக்கின்றன என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே  கூடாது. திருக்கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் வெளியேற்றப்பட வேண்டும் என்றெல்லாம் சில சுயநல சக்திகள் கூப்பாடு போடுவது அந்த அமைப்புகளின் சுயநலத்திற்காகத் தான் .

 எனவே அந்த சுயநல சக்திகளின் கோரிக்கைளுக்கு தமிழக அரசும் இந்து சமய அறநிலை யத் துறையும் அறவே செவிசாய்க்கக் கூடாது. பெரிய சிறிய திருக்கோவில்கள் அனைத் தும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்க வேண் டும் என்பதே கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின்  நிலைப்பாடு ஆகும் என தனது அறிக்கையில் பி. வாசுபூசாரி தெரிவித்துள்ளார்.

 

Top