logo
இ.கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ- முத்துக்குமரன் நினைவு நாள்... நினைவுத்தூணில் மாநில செயலர் முத்தரசன் அஞ்சலி…

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ- முத்துக்குமரன் நினைவு நாள்... நினைவுத்தூணில் மாநில செயலர் முத்தரசன் அஞ்சலி…

01/Apr/2021 04:03:22

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ- முத்துக்குமரன் நினைவு நாள்... அவரது மரணச் செய்தி...மீள் பதிவு..

புதுக்கோட்டை, ஏப். 1: புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன்(43) ஞாயிற்றுக்கிழமை (1.4.2012)புதுக்கோட்டை அருகே நேரிட்ட சாலை விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.


புதுக்கோட்டை அருகே அன்னாவாசலில் உள்ள கட்சி நிர்வாகியின் துக்க நிகழ்ச்சிக்காக காலையில் தனது பொலிரோ வாகனத்தில் புதுகை ஒன்றியச்செயலர் ஆர். முருகானந்தத்துடன் ஆரியூர் அருகே சொக்கநாதபட்டியை கடந்தபோது வாகனத்தின் முன் பக்க டயரில் எதிர்பாராத விதமான காற்று இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து தலை குப்புறக்கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உள்ளேயிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் முத்துக்குமரன் தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

உடன் சென்ற கட்சி நிர்வாகி மற்றும் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். மரணத்தை விசாரிக்க மாலையுடன் சென்றவர் மரணத்தை தழுவியது தொகுதி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

முட்டாள்கள் தினத்தால் குழப்பம்: ஞாயிற்றுக்கிழமை முட்டாள்கள் தினம் என்பதால் அதிகாலையில் இலங்கை அதிபர் ராஜபக்ஷ மரணம் என குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) செய்தி அலைபேசி மூலம் பரவியதால் அதை எவரும் நம்பவில்லை. இந்நிலையில், முத்துக்குமரனின் மரணச்செய்தி பரவியபோது அதையும் எவராலும் நம்ப முடியாத நிலையே வெகு நேரம் நீடித்தது.


மரணத்தை உறுதி செய்த விராலிமலை எம்எல்ஏ:  விபத்து நேரிட்ட தகவலை கேள்வியுற்ற விராலிமலை தொகுதி உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கர் அன்னவாசலில் இருந்து சம்பவ இடத்துக்குச் சென்று எம்எல்ஏ முத்துக்குமரனை பரிசோதித்து பார்த்த பிறகே மரணச்செய்தி உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத்தொகுதிகள் அதிமுக கூட்டணி சார்பில் மாவட்டத்தின் தலைநகரின் தொகுதியில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு பரபரப்பான சூழலில் வெற்றி பெற்றவர் எஸ்.பி. முத்துக்குமரன்.


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் விவசாய குடும்பத் தைச் சேர்ந்த சி. பழனிவேல்- முல்லையம்மாள்  தம்பதியருக்கு ஒரே மகனாக கடந்த 16.6.1968 -ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலும், கல்லூரிப்படிப்பை புதுகை மாமன்னர் கல்லூரியிலும் முடித்தார். கல்லூரிப் பருவத்தில் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 

இதைத்தொடர்ந்து இடது சாரி இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கடந்த 2009 -இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலராக பொறுப்பேற்றார். 

இதைத் தொடர்ந்து 2011 -ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளரைவிட சுமார் 3 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தினார். மரணமடைந்த முத்துக்குமரனுக்கு,  நீதித்துறையில் பணியாற்றி வரும்  சுசீலா என்ற மனைவியும்,   நர்மதா என்ற மகளும் நரேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். 

இ.கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் மறைந்தது...

புதுக்கோட்டை மக்களைப் பொருத்தவரை இதநாள் வரை சந்தித்திராத வகையில் மிகவும் எளிமையானவர். எளிதில் அணுகக்கூடியவர். சட்டப்பேரவை வரலாற்றில் தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக கட்சி பேதமின்றி அதிகமான கேள்விகளை கேட்டவர் இவர்தான். முத்துக்குமரனைப் போல பேரவையில் முத்தான கேள்விகளை பிற உறுப்பினர்கள் கேட்டால் பேரவையின் நேரம் மீதமாகும் என முதல் கூட்டத்தொடரிலேயே சபாநாயகராலும், முதல்வராலும் பாராட்டுப் பெற்றவர்.

இவரது இழப்பு அவரது குடும்பத்தினரை விட  தொகுதி மக்களுக்கே அதிகம். புதுகை சட்டப்பேரவைத் தொகுதியின் அரசியல் சுவட்டின் பக்கங்களில் அதிக இடத்தை நிரப்பக்கூடிய வகையில் தொண்டாற்றிய நட்சத்திரம் மறைந்தது.

அனைத்துக்கட்சியினர் இரங்கல்: புதுகை டவுன் ஹாலில் வைக்கப்பட்டிருந்த முத்துக்குமரனின் பூத உடலுக்கு,

அரசு சார்பில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  ந. சுப்பிரமணியன், வீட்டு வசதித்துறை அமைச்சர் கே. வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர்  ப. மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். தமிழ்ச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.கே. வைரமுத்து, சி. விஜயபாஸ்கர், கு.ப. கிருஷ்ணன், மு. ராஜநாயகம், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, நகராட்சித்தலைவர் வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான், நிர்வாகிகள் ஆர். நெடுஞ்செழியன், வி. ராசு.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ -க்கள் சி. சாமிநாதன், ஜெ. முகமதுகனி, மூத்த வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன் உள்ளிட்டோர். மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்ட செயலர் எம். சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ- எஸ். ராஜசேகரன், முன்னாள் நகராட்சி உறுப்பினர் சண்முகபழனியப்பன் உள்ளிட்டோர்.

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். ரகுபதி, நிர்வாகிகள், ரா.சு. கவிதைப்பித்தன், சி. முத்துச்சாமி, த. சந்திரசேகரன், க. நைனாமுகமது மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தினர், அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள், பல்வேறு  சேவை அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். திங்கள்கிழமை சொந்த ஊரான நெடுவாசலில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

இன்று 9-ஆம் ஆண்டு நினைவு நாள்..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சொக்கநாதபட்டியில்  விபத்து நடந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரனின் நினைவு தூணுக்கு   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்

Top