logo
வம்பன் தனியார் வேளாண் கல்லூரியில் பயிர் மருத்துவ கண்காட்சி

வம்பன் தனியார் வேளாண் கல்லூரியில் பயிர் மருத்துவ கண்காட்சி

29/Mar/2021 05:13:37

புதுக்கோட்டை, மார்ச்: எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய பயிர் மருத்துவமுகாம் மற்றும் பயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புஸ்கரம் வேளாண் கல்லூரியில் நடைபெற்றது.


 நிகழ்ச்சிக்கு புஷ்கரம் கல்லூரி முதல்வர் முனைவர் வி.செல்லமுத்து தலைமை வகித்தார்.  புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கே.ஜேயல் பிராபாகர் பயிர் மருத்துவ கண்காட்சியை தொடங்கிவைத்து பேசுகையில், பயிர் மருத்துவமுகாம் ஒரு புதுமையான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சி. விவசாயிகளின் பூச்சி நோய் மற்றும் நுண்ணூட் டசத்து குறைபாடுகளில்  விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்க வழிவகுக்கும். மேலும் வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பயிர்களில் ஏற்படும்  பாதிப்புகள்  மற்றும் அதை நீக்கும் வழிமுறைகளை பற்றிய அனுபவ அறிவை பெற இந்த முகாம் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிட்டார். 

எம்.எஸ்.சுவாமிநான் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி முனைவர் ஆர்.ராஜ்குமார்  பேசுகையில், பயிர் மருத்துவ முகாம் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. பயிர் மருத்துவ முகாமில் பயிரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முறையாக நுண்ணோக்கி மற்றும் பிற உபகரணங்கள் உதவியுடன் கண்டறியபட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பரிந்துரைகள் வழங்கப்படுகின்றது.

பயிர்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு  தீர்வு என்ற முறை கையாளப்படுகின்றது. இது விவசாயிகளின் இடுபொருட்கள் செலவை குறைத்து விளைச்சல் இழப்பை தடுக்க உதவும். விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள இந்த நிகழ்வை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மிகுந்த அக்கறையுடன் ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில், புஷ்கரம் கல்லூரி ஆலோசகர் முனைவர் கே.குமாரசாமி, செயலாளர் மற்றும் நிர்வாக அலுவலர் எம்.ராஜாராம் பயிர் மருத்துவர்கள் கே.பாரதிதாசன், பி.செந்தில்குமார், ஜி.முருகன், ஆர்.வினோத் கண்ணா ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் விவசாயிகள், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 உதவிப்பேராசிரியர்  எஸ்.வினோத்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கல்லூரியின் இணைப்பேராசிரியர் சாந்தி வெள்ளையப்பன் வரவேற்றார். எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி.விமலா நன்றி கூறினார்.

Top