logo
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்  பூச்சொரிதல் விழா நாளை நடைபெறுகிறது

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நாளை நடைபெறுகிறது

27/Mar/2021 03:54:17

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை- 28.3.2021) விமரிசையாக நடைபெறுகிறது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த மாரியம்மன் கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும்.வற்றாத ஆகாய கங்கை, அருமை குளம், ஜம்புகேசுவரர் சுனை, பொழுதுபடா சுனை ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் அமைந்த பெருமை வாய்ந்ததும், நாரதமுனி அம்பாளை வழிபட்ட மகிமையால் நாரதர் மலை என்ற இத்தலம் மருவி தற்போது நார்த்தாமலை என அழைக்கப்படுவதாக புராணக் கதையும் உண்டு. 

இப்புண்ணிய தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு  நாளை (ஞாயி்ற்றுக்கிழமை) இரவு பூச்சொரிதல் விழா விமரிசையாக நடைபெறுகிறது.  இதை யொட்டி,புதுக்கோட்டை மற்றும் நார்த்தாமலை சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை  மின் அலங்கார ஊர்திகளில் மலர்களை எடுத்துச்சென்று அம்மனுக்கு சார்த்தி வழிபாடு நடத்துவர்.

 தொடர்ந்து இக்கோயிலின் பங்குனிப் பெருந்திருவிழா 4.4.2012 -ஆம் தேதி காப்புக்கட்டு தலுடன் தொடங்கி 13.4.2012 -ஆம் தேதி வரை 10 நாள்கள்   நடைபெறுகிறது . விழாவை யொட்டி ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் மண்டகப்படியும், அன்னவாகனம், ரிஷப வாகனம், சிம்மவாகனம், குதிரை வாகனம் போன்ற வாகனங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியும் நடைபெறும்.

 விழாவி்ன் முக்கிய நிகழ்வாக ஏப்ரல்12 -ஆம் தேதி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெறு கிறது. இதில்  பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழாவின் நிறைவு நாளான ஏப்ரல்13 -ஆம் தேதி இரவு அம்மன் வீதியுலாவும், தொடர்ந்து காப்பு களைதல் மற்றும் தீர்த்தவாரி விழாவும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை, புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறையினர், விழாக்குழுவினர், மண்டகப்படி தாரர்கள் செய்துள்ளனர்.  


Top