logo
புத்தக வாசிப்பின் வழியே விரியும் உலகம்- முனைவர் ந.முருகேசபாண்டியன்

புத்தக வாசிப்பின் வழியே விரியும் உலகம்- முனைவர் ந.முருகேசபாண்டியன்

27/Sep/2020 10:20:15

தகவல் தொடர்புக் கருவிகளின் வளர்ச்சியில் புத்தகம் குறிப்பிடத்தக்க திருப்புமுனை. இதுவரை சமூகம் பல்லாண்டுகளாகக் கண்டறிந்திருந்த தகவல்களை அச்சு ஊடகம் மூலம் பதிவு செய்ததன் விளைவாக எல்லாத் துறைகளிலும் பிரமாண்டமான வளர்ச்சி பாய்ச்சலாக நடைபெற்றது. மனித குலம் பல தலைமுறைகளாகப் பெற்ற அனுபவங்கள் புத்தகங்களின் வாயிலாக அடுத்த தலைமுறைக்கு அறிமுகமானதால்,  புதிய கண்டுபிடிப்புகள் பல்கிப் பெருகின. இன்று மின்னணு ஊடகம்  பரவலானாலும், மின்-புத்தகம் புதிய வடிவில் தொடர்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மனித குல வரலாற்றில் மொழியினால் ஆன புத்தக உருவாக்கம், வாசிப்பு ஆகியன மனிதர்கள் கண்டறிந்த முக்கியமான விஷயங்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் உலகை மாற்றிய புத்தகங்களின் எண்ணிக்கை அளவற்றது. புத்தக வாசிப்பின் வழியே ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் ஏற்படும் நுண் மாறுதல்கள் முக்கியமானவை. எனவேதான் புத்தகங்களின் உலகில்  வாசிப்பின் வழியே பயணிப்பது ஒருபோதும் முடிவற்று நீள்கின்றது.

        ஒவ்வொரு புத்தகமும் ஏதோவொரு விஷயத்தைப் பொதிந்துகொண்டு மௌனத்தில் உறைந்துள்ளது.  வாழ்க்கைப் பரப்பின் யதார்த்த சம்பவங்கள் தொடங்கி விநோதங்கள், அதியற்புதங்கள் எனச் சகலமும் புத்தக வரிகளுக்கிடையில் மறைந்துள்ளன. எல்லாப் புத்தகங்களும் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன. புத்தகம் என்பது ஒருவகையில் மாந்திரிகப் பொருளாகக் காட்சி அளிக்கின்றது.  புத்தகங்களைத் தொடர்ந்து வாசிக்கின்றவர்கள், காலப்போக்கில் மனப்பிறழ்வுக்குள்ளாகி விடுவார்கள் என்ற நம்பிக்கை அறுபதுகளில் கூடத் தமிழகத்தில் நிலவியது. இன்று எழை பணக்காரன் என்ற வேறுபாடு இன்றிப் பெரும்பாண்மையான வீடுகளில் புத்தகங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.

            பொதுவாகப் புத்தகங்கள் வாசிப்பின் மூலம் வாசகர்களை வேறுபட்ட உலகங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. மனித மனம் புனைந்துள்ள நம்பிக்கைகளைச் சிதைத்துப் புதிய கற்பிதங்களைப் புத்தகங்கள் நாளும் உருவாக்குகின்றன. பல்லாண்டுகளாக வழக்கினில் இருக்கும் எல்லாவிதமான மரபுகளையும் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அதிர்ச்சி மதிப்பீட்டினை ஏற்படுத்தும் புத்தகங்கள் ஒருவகையில் வாசகரின்  சமநிலையைச் சிதலமாக்குகின்றன. இதுவரையில் கருத்துரீதியில் உண்மை என நம்பியவற்றைத் தகர்த்து புதிய பிம்பங்களை உருவாக்குவதில் புத்தகங்களுக்கு நிகராக எதுவுமில்லை. புத்தகங்களை அருமையான நண்பர்களைப் போல என்று  பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள திருவள்ளுவரின் கருத்து இன்றைக்கும் பொருந்துகின்றது.             

            புத்தக வாசிப்பினைப் பழக்கமாகக் கொண்ட மனிதர்கள், ஒருநிலையில் எல்லாவற்றையும் புத்தகங்களின் மூலமாக அறிந்திட விழைகின்றனர். இந்நிலையில் வாசிப்பு என்பது, வாசர்களுக்கு தன்னையும் தனது சூழலினையும் விளங்கிக் கொள்ளவும், எதிர்வினையாற்றவும் வழி வகுக்கின்றது. பூமியில் மனித இருப்பின் அர்த்தம் எதுவெனக் கண்டறிய முயலும் மனதின் இடைவிடாத தேடல்கள், புத்தகங்களின் மூலம் தொடர்கின்றது.  மொழியினால் கட்டமைக்கப்பட்ட நினைவுகளினால் சாத்தியமாகியுள்ள தனிமனித இருப்பினில் ஏற்படும் மன அழுத்தமானது, மாறுபட்ட மதிப்பீடுகளால் குழம்புகின்றது. இந்நிலையில் தீவிரமான கருத்தியல் சார்ந்த ஒவ்வொரு புத்தகமும், மனதின் இடுக்குகளில் நுட்பமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ஒருநிலையில் புத்தக வாசிப்பு மூலம் பெறும் அனுபவம் என்பது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்திடவும், தன்னிலை அறிந்திடவும் உதவுகின்றது. இவையெல்லாம் ஏன் இப்படி நடைபெறுகின்றன எனக் காலந்தோறும் கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளைப் புத்தக வாசிப்பினால் அறிந்திட முடியும். கல்யாண குணங்கள் மிக்க ராமர் ஏன் தனது மனைவியான சீதை மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் செய்தார் என்ற கேள்வியைச் சமகாலத்திற்குப் பொருத்திட முடியும் . ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தில் ஒதெல்லோ தனது மனைவி டெஸ்டிமோனா நடத்தையில் தவறுதலாகச் சந்தேகப்பட்டு அநியாயமாகக் கொலை செய்தது இன்று வரை வாசிப்பினில் ஏற்படுத்தும் கேள்விகள் முக்கியமானவை. கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள்  புத்தகம் மூலம் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்படும் போது மனம் சமநிலை அடைகின்றது. மீண்டும் ஒரு முறை அது போன்ற தவறுகள் நிகழக் கூடாது என்ற எண்னத்தையும் வாசிப்பு ஏற்படுத்துகின்றது.  

            சமூக அறம், தனிமனித அறம், நியாயம், அநியாயம் பற்றி இன்று சமூகத்தில் நிலவும் சகலவிதமான மதிப்பீடுகளும் புத்தகங்களின் வழியே ஆழமாக ஊடுருவியுள்ளன. மனிதர்களிடையே காணப்படும் அதிகாரம், வன்முறை, அற்பத்தனம், வில்லங்கம், கருமித்தனம் போன்ற கீழான குணங்களுக்கு எதிரான மனநிலைக்குத் தீனி போடுகின்ற வகையிலும்  புத்தகங்கள் உள்ளன. இரண்டாம் உலகப்போரினால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான ஹிட்லரின் பாசிசக் கருத்துக்களை ஜெர்மானியர்களிடையே பரப்பிட அவரது புத்தகமானமெயின் காம்ப்பெரிதும் பயன்பட்டுள்ளது. எனவே புத்தகம் என்றாலே மேன்மையானது என்ற பொதுப்புத்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும். புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பதில்  செயல்படும் அரசியல் பற்றிய விழிப்புணர்வு அவசியம். ஒவ்வொரு புத்தகமும் கருத்துரீதியில் ஏதோவொரு அரசியலை முன்னிலைப்படுத்துகின்றன என்ற புரிதலுடன் வாசிப்பைத் தொடங்க வேண்டும்.

     இளம் வாசகருக்குத் தொடக்கத்தில் எந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் ஏற்படுவது இயற்கை. தொடர்ச்சியான தேடல்களினால் காலப்போக்கில் வாசிப்பினால் எவை தேடிக் கண்டடைய வேண்டிய புத்தகங்கள் என்ற புரிதல் ஏற்படும். எதிலும் சாராத நடுநிலைமை என்ற மனநிலையுடைய வாசகர்கூட, வாசிப்பின் வழியே பருண்மையான கருத்தினுக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகின்றது. காத்திரமான வாசகர், தொடர்ந்த வாசிப்புகளின் மூலம் தன்னையே மறுதலித்துக்கொண்டு புதிதுபுதிதான தளங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பார்.            பன்முக வாசிப்புகள் நாளடைவில் தேர்ந்த வாசகரைப் படைப்பாளியாகவோ, அல்லது களத்தில் இறங்கிப் போராடுகின்றவராகவோ மாற்றிவிடும். தனி மனிதனுக்குள் பொதிந்துள்ள ஆற்றலைச் சமூகத்திற்குப் பயன்படும்வகையில் மாற்றுகின்ற வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. ரசியாவில் நடைபெற்ற சோஷலிச புரட்சி முதலாக உலகமெங்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடுகின்ற போராளிகளுக்குப் புத்தகங்கள் பின்புலமாக உள்ளன.

  

            உலகமயமாக்கல் காரணமாக நுகர்பொருள்ப் பண்பாடு மேலோங்கியுள்ள காலகட்டத்தில் தமிழ் அடையாளம் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. தொன்மையும் பாரம்பரியமும் மிக்க தமிழரின் பண்பாட்டு அடையளங்களைப் பாதுகாப்பதென்பது முழுக்க தமிழ் மொழியுடன் தொடர்புடையதாகும். இந்நிலையில் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பது என்பது நுண்ணரசியல் சார்ந்ததாக மாற்றம் அடைந்துள்ளது. இன்று ஆங்கில வழியில் கல்வி பயிலும் தமிழகக் குழந்தைகள், தாய் மொழியான தமிழை அறிந்திட புத்தகங்களைத் தவிர வேறு வழி இல்லை. தமிழ் மரபின் தொடர்ச்சியைச் சாத்தியப்படுத்துகின்ற புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டிய நேரமிது.

 

Top