logo
கலை நிகழ்ச்சிகளை இரவு 1 மணி வரை நடத்த அனுமதிக்கக்கோரி  ஆட்சியரிடம்  நாட்டுப்புற மேடைக்கலைஞர்கள் மனு

கலை நிகழ்ச்சிகளை இரவு 1 மணி வரை நடத்த அனுமதிக்கக்கோரி ஆட்சியரிடம் நாட்டுப்புற மேடைக்கலைஞர்கள் மனு

10/Mar/2021 01:49:23

புதுக்கோட்டை, மார்ச்:  தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி உரிய நிபந்தனைகளோடு இரவு  1 மணி வரை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி தமிழக நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமகேஸ்வரியிடம்  புதன்கிழமை மனு  அளித்தனர்.

 இது குறித்து தமிழ்நாடு நாட்டுப்புற மேடைக்கலைஞர்கள் சங்க செயலர் ஆறுமுகம் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  ஆயிரத்துக்கும் மேல்பட்ட கலைஞர்கள் கலைத்தொழில் மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கலைஞர்களுக்கு விழாக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தான் அதிகமான கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

  இந்நிலையில் தற்போது  தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டதையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு  நடத்தப்பட்டு வருகின்றன.  இதில், கோயில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

சில சமயங்களில் கலைநிகழ்ச்சிகள் செய்யப்படாமல் பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.  மேலும் பல கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருவதால் வாழ்வாதாரம்  பாதிக்கும் சூழல்  உருவாகியுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி கலை நிகழ்ச்சிகள் இரவு  1 மணிவரை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென தமிழக நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கம் சார்பில்  செயலர் ஆறுமுகம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

                                                   

      


Top