logo
திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில்  திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தனம்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தனம்

06/Mar/2021 01:47:12

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை அருகேயுள்ள அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில்  அரக்கோணம் திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி குழுவினரின்  திவ்ய நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஶ்ரீரங்கம் அரங்கநாதருக்கு அழகு சேர்த்துவரும் பாண்டியன் கொண்டை மற்றும் திருவாபரணங்களை வழங்கிய திருவேங்கட ராமாநுஜ ஜீயரென்னும் ஸ்ரீமான் அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகளின் வழிவந்த அரக்கோணம்  பழனிபேட்டை திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி குழுவினர் ஆண்டுதோறும் ஶ்ரீரங்கம் கொள்ளிடக்கரையில் நடைபெறும் தீர்த்த மஹோத்ஸவம் விழாவில்  கலந்து கொண்டு கீர்த்தனங்கள் இசைத்து வழிபடுவது வழக்கம்.

இதைத்தொடர்ந்து, ஶ்ரீ ரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஸ்ரீமான் அல்லூரி வெங்கடாத்ரி சுவாமிகளின் 114 -ஆவது தீர்த்த மஹோஸ்தவ விழாவில் இக்குழுவினர் கலந்து கொண்டு கீர்த்தனங்களை இசைத்து வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து பல்வேறு திவ்ய தேசங்களில் உள்ள ஆலயங்களுக்குச்சென்று திவ்ய நாம சங்கீர்த்தனம் நடத்துவதை வழக்கமாகக் கொண்ட  திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி குழுவினர் சுமார் 56 பேர்  சனிக்கிழமை அதிகாலையில் திருமயம் அருள்மிகு சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் நாம சங்கீர்த்தனம் செய்து பெருமாளை வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை வழியாக தஞ்சை பெரியகோயில் மற்றும் 3 திவ்ய தேச தலங்களை வழிபட்ட பிறகு,  மன்னார்குடி ராஜகோபால சுவாமிகளை தரிசனம் செய்து கும்பகோணம் கோவிந்த புரம் சென்று சுவாமி தரிசனம் செய்தபின்  இரவு திருக்கோயிலூரில்  திவ்ய நாம சங்கீர்த்தனம் செய்தபின் தங்களது புனித யாத்திரையை முடித்துக் கொண்டு அரக்கோணம் திரும்புகின்றனர்.   


Top