logo
 கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென ஆசிரியர்களை  கட்டாயப்படுத்தக் கூடாது: மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை.

05/Mar/2021 11:47:05

புதுக்கோட்டை,மார்ச்:  ஆசிரியர்களை கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என  கட்டாயப்படுத்தக் கூடாது என்று  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை: தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும் என்று தொடக்கக்கல்வித்துறையின்  உயர் அலுவலர்களும், கள அலுவலர்களும்  ஆசிரியப் பெருமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

மத்திய,மாநில அரசுகளின் கொரோனாபரவல்  தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் பெரிதும் வரவேற்கிறது.ஆனாலும்,கொரோனா தடுப்பூசி  குறித்து பொதுமக்களாலும்,ஆசிரியர்,அரசு ஊழியர்களாலும் எழுப்பப்பட்டு வரும் அச்சங்களுக்கும் -ஐயங்களுக்கும்  மத்திய,மாநில அரசுகள்  வெளிப்படையாக,தெளிவான வகையில் விளக்கமும்,விடையும்  அளித்திட வேண்டும்

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்தும்,உயிர்இழப்பு, பயபீதிகள் குறித்தும், காய்ச்சல்,உடல்வலி ஏற்படுவது குறித்தும் விளக்கம் தரப்படல் வேண்டும்.கொரோனா தடுப்பூசியின் உயிர் பாதுகாப்பு குறித்தும்,மருந்தின் நம்பகத்தன்மை குறித்தும் அனைத்து தரப்பினரும் திருப்தி கொள்ளும் வகையில், மனநிறைவடையும் வகையில்  விளக்கம் தரப்பட்டு அனைத்து தரப்பினரும் மனமுவந்து தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் விளக்கம் தெரிவிக்கப்படல் வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள், ஆசிரியர்,அரசு ஊழியர் உள்ளிட்ட அனைத்துதரப்பினரின் கருத்துகளை,கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு  தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.சட்டமன்றப் பொதுத் தேர்தலின் பெயரில்  தொடக்கக்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு கொரோனா தடுப்பூசியினை கட்டாயப்படுத்தி  செலுத்துவதை கைவிட வேண்டும் என  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் தமிழ்நாடு கல்வித்துறை உயர்அலுவலர்களை, கள அலுவலர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

                                                   

        


Top