logo
ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கியது வாகனப் போக்குவரத்து

ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் தொடங்கியது வாகனப் போக்குவரத்து

22/Feb/2021 09:19:49

ஈரோடு, பிப்:   ஈரோடு வெண்டிபாளையத்தில்  புதிதாக கட்டப்பட்ட   ரயில்வே நுழைவு பாலத்தில் திறப்பு விழா எதுவுமின்றி  வாகனப் போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட வெண்டிபாளையத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன. திருச்சி மார்க்கம், சென்னை மார்க்கம் என இரண்டு வழித்தடத்திலும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் இதனால் அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருக்கும்.

இப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள், பஸ் போக்குவரத்து என பல தரப்பினரும்  பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இரண்டு ரயில்வே கேட்டுள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், வெண்டிபாளையம் முதல் ரயில்வே கேட் உள்ள இடத்தில் நுழைவு பாலம் அமைக்கப்பட்டது.

இரண்டு கோடி ரூபாய் செலவில், கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு துவங்கிய பணி தற்போது முடிந்து விட்டது. முறைப்படியான திறப்பு விழா வரை காத்திராமல் வாகன போக்குவரத்து தொடங்கி விட்டது. 

ஆனால், பஸ் போக்குவரத்து துவங்கப்படவில்லை.இவ்வாழியாக, கருமாண்டாம்பாளையம் வரை செல்லும் தடம் எண் 30  பஸ், பாசூர் வரை செல்லும், 6ஏ ஆகிய பஸ்கள் ரயில்வே துறை முறைப்படி அனுமதி அளித்த பின்பு இயங்கும், என கூறப்படுகிறது.

தற்போது தேர்தல் வர உள்ளதால் திறப்பு விழா நடத்தாமலே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்த மக்கள் தற்போது நிம்மதியாக பயணிக்கும் நிலை உருவாக நடவடிக்கை எடுத்த ரயில்வேதுறைக்கு  அனைத்து தரப்பினரும்   பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Top