logo
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மத்திய அமைச்சர் கோரிக்கை

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மத்திய அமைச்சர் கோரிக்கை

22/Feb/2021 11:49:34

ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளார். எனினும், தனது இந்தக் கோரிக்கை ஜாதியவாதத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் விக்ரம்காட் பகுதியில் மலைவாழ் மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அடுத்து நடத்தப்பட இருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது ஜாதிவாரியாகவும் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான், பல்வேறு தரப்பு மக்களும் சமூக, பொருளாதார நிலையில் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இது ஜாதியவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியல்ல ஜாதி ரீதியாக எந்த பிரிவு மக்கள் பின்தங்கியுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சி மட்டும்தான்.

எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் வாடும் மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய அளவில் வரும் 25-ஆம் தேதி எங்கள் கட்சி சார்பில்  தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படவுள்ளது

மகாராஷ்டிரத்தில் மற்ற ஜாதி மற்றும் பிரிவினருக்கு எவ்வித இடையூறு ஏற்படாத வகையில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலித் தலைவரான அதாவலே, இந்திய குடியரசுக் கட்சியின் ( ஏ) தலைவராவார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவரது கட்சிஉள்ளது குறிப்பிடத்தக்கது.

Top