logo
பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டம்: முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார்

13/Feb/2021 12:38:06

சென்னை: தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று(சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

 பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று விவசாயிகளுக்கு பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததற்கான ரசீதை விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகளை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்தார். அனைத்து குறைதீர்க்கும் துறைகளும், இந்த 1100 என்ற எண்ணுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.  மேலும் 12 அரசுத் துறைகளுக்கான பல்வேறு திட்டப் பணிகளையும் அவா் தொடங்கி வைக்க உள்ளாா்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். இதற்கான அரசு உத்தரவும், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பயிா்க் கடன் தள்ளுபடி ரசீது 10 முதல் 15 நாள்களில் அளிக்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீது அளிக்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொது மக்களின் புகாா் மனுக்களைத் தீா்க்க வகை செய்திடும் குறைதீா் மைய தொலைபேசி எண்ணின் (1100) செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார். 

மேலும், உள்துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள், சுற்றுச்சூழல் துறை, பள்ளிக் கல்வி, எரிசக்தி, வேளாண்மை, சுகாதாரம், வருவாய், சுற்றுலா ஆகிய துறைகளுக்கான கட்டடங்களைத் திறந்து வைத்தும், சில கட்டடங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

கீழடி அகழாய்வு: தொல்லியல் துறை சாா்பில் கீழடி அகழாய்வின் அடுத்தகட்ட பணிகளையும் முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின்பு, வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறைக்கான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

 

Top