logo
கொரானாவை கட்டுப்படுத்துவதில் நாட்டின் முன்னோடி மாநிலம் தமிழகம்: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதம்

கொரானாவை கட்டுப்படுத்துவதில் நாட்டின் முன்னோடி மாநிலம் தமிழகம்: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதம்

13/Feb/2021 08:44:20

சென்னை:   மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜய பாஸ்கர் (04.02.2021) சட்டப் பேரவையில் ஆற்றிய உரை :

 இன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையில் உலகமே வியந்து பாராட்டுகின்ற அளவிற்கு, உற்று நோக்கக்கூடிய அளவிற்கு, புருவத்தை உயர்த்தி பார்க்கக் கூடிய அளவிற்கு கோவிட்- 19 என்ற கொரானாவை கட்டுப்படுத்துவதிலே களத்திற்கு சென்று நேரடியாக அனைத்து துறைகளையும் தன்னுடைய தலைமையிலே முடக்கிவிட்டு, மிகச் சிறப்பாக இன்றைக்கு மத்திய அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தினுடைய பாராட்டுக்களை பெற்றிருக்கக்கூடிய, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கி ஏழையெளிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுடைய வயிற்றில் பால் வார்த்திருக்கக்கூடிய, 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசிடமிருந்து பெற்று தந்திருக்கக்கூடிய, 2000 அம்மா மினி கிளினிக் ஒரே நேரத்தில் வழங்கி, அதில் 872 முதலமைச்சரினுடைய அம்மா மினி கிளினிக் திறந்து இந்தக் குறுகிய காலத்தில் 7,34,951 நோயாளிகளை சிகிச்சை அளித்திருக்கக்கூடிய  முதலமைச்சர் அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் என்னுடைய நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


சூலூர் தொகுதி, சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜெ. கிருஷ்ணாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு வருங்காலத்தில் அரசு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன். அதன் அருகில் அய்யம்பாளையம் கிராமத்தில் முதலமைச்சரினுடைய அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டிருக்கிறது என்ற நல்ல தகவலையும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

 சட்டமன்ற உறுப்பினருடைய பிரதான கோரிக்கை. அந்தப் பகுதி மக்களின் அன்பைப் பெற்று, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு நேரிடையாக சென்றபோதுகூட அந்தக் கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.  மாண்புமிகு முதலமைச்சருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்த சங்கரமந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரமுயர்த்த அரசு அவசியம் நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

தமிழகத்திலே அம்மாவினுடைய நல்லாட்சியிலே மட்டும், இந்த ஒன்பது ஆண்டுகளில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.  பல சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தொடர்ந்து புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில்,  முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம்தான் முதலமைச்சருடைய அம்மா மினி கிளினிக் என்ற அற்புதமான திட்டமாகும்.

 இன்னும் சொல்லப்போனால், காலையிலும் செய்யும் சேவையை மாலை நேரத்திலும், மகத்தான சேவையை, கிராமப்புறத்தில், நகர்ப்புறத்தில் மக்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளை தேர்தெடுத்து மக்கள் பிரதிநிதிகளுடைய வேண்டுகோளை ஏற்று இன்றைக்கு அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. 


எங்கெல்லாம் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வேண்டுமென்று, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் விரும்புகின்றார்களோ, அங்கெல்லாம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், எந்த முதலமைச்சரும் செய்யாத, ஒரு வரலாற்றுச் சாதனையாக, 2000 முதலமைச்சருடைய அம்மா மினி கிளினிக்கை,  ஒரே நேரத்தில், கொடுத்து, இன்னும் சொல்லப்போனால், அதற்கு 2000 புதிய மருத்துவர்கள், 2000 புதிய செவிலியர்கள், 2000 பணியாளர்கள், எல்லாவற்றிற்கும் இன்றைக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறோம். 


 இந்தப் பணியிடங்களை இந்த 2 வாரங்களில் நேரடியாக,  மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக, மாவட்ட சுகாதார மையம் மூலமாக நியமிக்க இருக்கின்றோம்.  ஆகையினால், இந்த அரிய, பெரிய, சிறந்த வாய்ப்பு தாங்கள் குறிப்பிடுகின்ற அந்த ஊராட்சிக்கும் வழங்கப்படும் என்பதை நான் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.  

காரை ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஓரிரு அல்லது இரண்டு வாரங்களிலே அந்த மக்கள் கேட்கக்கூடிய, சட்டமன்ற உறுப்பினர் கேட்கக்கூடிய அனைத்து உபகரணங்களும் வழங்கப்படும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

இரண்டு கேள்விகளை நமது மரியாதைக்குரிய அண்ணன், மூத்த உறுப்பினர்  கேட்டிருக்கிறார்கள். 


 ஒன்று முதலமைச்சருடைய அம்மா மினி கிளினிக் மிகப் பெரிய வரவேற்பினை பொதுமக்களிடத்தில் பெற்றிருக்கிறது.  சட்டமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு அமைச்சர்கள் நேரடியாக அங்கே களத்திற்குச் செல்கின்றபோது எல்லா ஊராட்சிகளுக்கும் அவர்கள் விரும்பி இது அவசியம் வேண்டும் என்று கேட்டக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. ஆகையால், முதற்கட்டமாக இன்றைக்கு 872 தொடங்கப்பட்டிருக்கின்றது. 


 2000-த்திற்குப் பின் இன்னும் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றது. அதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசென்று, மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கிணங்க மக்களின் நலன் காக்கக்கூடிய முதலமைச்சர் நிச்சயமாக அதனை சாதகமாக பரிசீலிப்பார் என்ற நல்ல தகவலை மாண்புமிகு பேரவைத் தலைவர்  வாயிலாக மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.  


அதுபோல் இன்றைக்கு இன்னொரு முக்கியமான கேள்வியினை சட்டமன்ற உறுப்பினர் கேட்டிருக்கிறார். முதற்கட்டமாக  இன்றைக்கு தமிழகத்தில்  Covishield என்று சொல்லக்கூடிய vaccine    பாரதப் பிரதமர் மூலம் தமிழக முதல்வரால்  தொடங்கி வைக்கப்பட்டு  Covishield இன்றைக்கு  10,45,000  vaccine -னும்,Covaxin 1,89,920 vaccine  என மொத்தம் 12,34,920 vaccine வழங்கப்பட்டு தற்போது முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை(பிப்.4) 1,33,000 பேர்களுக்கு vaccine  வழங்கியிருக்கிறோம். 


பிப்.3 -இல் சுகாதாரத் துறை முன்களப் பணியாளர்களுக்கு 5,55,464 பேர்களும், காவல் துறையில் 1,54,681 பேர்களும், உள்ளாட்சி மற்றும் நகராட்சித் துறையில் 1,06,697 பேர்களும், வருவாய்த் துறையில் 35,757 பேர்களும் மொத்தம் 8,59,952 பேர்களை  identify செய்து வைத்துள்ளோம்.  பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேற்று முன்வந்து இந்த வாக்சினை எடுத்துக்கொண்டார்கள். இதுவரை vaccine எடுத்த அவர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைமூலம் பாராட்டுதல்களையும், நன்றியினையும் நான் இந்த நேரத்தில் மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.


  பொதுவாக vaccine  வரும்போது ஒரு தயக்கம், ஒரு hesitation அல்லது ஒரு சின்ன யோசனை இருப்பது வழக்கமான ஒன்று, வாடிக்கையான ஒன்று. அதையெல்லாம் தகற்த்தெரிந்து முன்களப்பணியாளர்களுக்கு ஒரு நம்பிக்கை ஊட்டுவதற்கு நானும் அரசு செயலாளர் அவர்களும் இந்தியாவில் தயாரிக்கக்கூடிய அந்த Covaxin என்ற அந்த vaccine   எடுத்துக்கொண்டோம்.   ஒருவேளை இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தால்  முதலமைச்சர் மற்றும் நம்முடைய அமைச்சர் பெருமக்கள், நமது சபாநாயகர் உட்பட அனைவரும் எடுத்து மக்களுக்கு ஒரு நம்பிக்கையினை ஊட்டியிருந்திருக்கலாம். 

 

அது விதிமுறைப்படி இப்போது முன் களப்பணியாளர்களுக்கு என்றிருப்பதனாலே இந்த வாரத்திற்கு பின்னால் இன்னும் ஒரு வாரத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பத்திரிகைத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர்,  சபாநாயகர்,துணை முதலமைச்சர், இங்கிருக்கக்கூடிய  அமைச்சர்கள்,  அனைவக்கும் வழங்க வேண்டுமென்று நாங்கள் கருத்துரு மத்திய அரசிற்கு சமர்ப்பித்திருக்கின்றோம். நிச்சயமாக ஓரிரு வாரங்களில் அதற்குண்டான சாதகமான பதில் வரும். 


சேலத்தில் முதற்கண் முதலமைச்சர் அவர்களுக்குப் பிறகு  சட்டமன்ற உறுப்பினர்  செம்மலை அவர்களுக்கும் முதலமைச்சர் அறிவித்துள்ளபடி  எந்தவித கட்டணமும் இல்லாமல் தடுப்பூசி  வழங்கப்படுமென்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனைத்து அமைச்சர்களும் மிகவும் ஆர்வமாக அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அதில் எந்த தயக்கமும் வேண்டாம்; பயமும் வேண்டாம்; பதற்றம் வேண்டாம்; இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து, கொரோனாவில் இந்த மகத்தான சாதனையை  முதலமைச்சர் தலைமையிலான அம்மாவினுடைய அரசு செய்திருக்கிறது. 

மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் எல்லாத் துறையும் சேர்ந்து, வருவாய்த் துறை அமைச்சர் போன்ற மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இதைச் செய்திருக்கிறார்கள்.  ஆகையால், ஓரிரு நாட்களில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதற்கட்டமாக வழங்குவதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்கும் என்றார். 

Top