logo
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

08/Feb/2021 03:11:00

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனுமதிக்கக் கோரி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த போராட்டத்தின் போது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலுரையின்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இதனை அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேரவை விதி எண் 110-இன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரையில்,  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியது மற்றும் வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பான வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி, சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த அரசியல் பின்னணியும் இன்றி, தன்னிச்சையாக பொதுமக்கள் கூடி நடத்திய இந்தப் போராட்டத்தின் இறுதியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


                                                   


Top