logo
ஈரோடு ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்  ஆய்வு:  பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஈரோடு ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு: பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

30/Jan/2021 06:58:21

ஈரோடு, ஜன: ஈரோடு ரயில் நிலையத்தில்  சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசன் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

தென்னக ரயில்வேயின் பொதுமேலாளர் ஜான் தாமஸ் பிப்-3-ஆம் தேதி ஈரோடு ரயில் சந்திப்பு நிலையத்தை  பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.  இதற்காக ஈரோடு ரயில் நிலைய சந்திப்பில்  மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ரயில்வே பணிமனைகள், ஊழியர் குடியிருப்பு, மருத்துவமனை உள்ளிட்டவற்றை பொலிவு படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த பணிகளை ஆய்வு செய்ய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் சீனிவாசன்  ஈரோடு ரயில் நிலையத்தில்  சனிக்கிழமை  ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர், ஈரோடு ரயில் நிலையம், ரயில் டிரைவர்கள், கார்டுகள் தங்கும் அறை, ரயில் நிலையத்தில்  உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, எஸ்கலேட்டர் பகுதி, டிக்கெட் முன்பதிவு மையம், எலக்ட்ரிக்கல் லோகோ பணிமனை உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 இதையடுத்து டிக்கெட் கவுன்டர், பிளாட்பார்மில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வினை முடித்து கொண்டு, கொடுமுடி நொய்யல் ஆற்று ரயில்வே பாலத்தினை புதுப்பிக்கும் பணியையும், கரூர் ரயில் நிலையத்தையும்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள ரயில் மூலம் சென்றார்.

Top