logo
புதுக்கோட்டை வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி விழா கோலாகலம்

புதுக்கோட்டை வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி விழா கோலாகலம்

29/Jan/2021 07:00:35

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் உள்ள பூசத்துறையில் தைப்பபூச தீர்த்தவாரி திருவிழா வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

மன்னராட்சி காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தையும் பாண்டியநாட்டையும் பிரிக்கும் எல்லைப் பகுதியாக புதுகை அருகே சுமார் 4 கிமீ தொலைவில் உள்ள வெள்ளாறு திகழ்ந்தது. அன்றைய காலம் தொடங்கி தொன்று தொட்டு இன்று வரை தைப்பூச நாளில் புதுக்கோட்டை திருக்கோயில்களில் இருந்து தெய்வ உற்சவர்களும் வெள்ளாற்றின் எதிர்கரைப் பகுதியிலிருந்து பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ தெய்வங்களும் பக்தர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆற்றில் இறங்கி தீர்த்தாவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

வெள்ளாற்றங்கரை தைப்பூச தல வரலாறு: 

 புராண காலத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் ஏகாந்த நிலையில் பூலோகத்தில் சஞ்சரிக்க விரும்பி பூவுலகை வலம் வந்தனர். அப்போது வெள்ளாற்றின்(சுவேத நதி) அழகில் மயங்கி இந்த இடத்தில் வந்து இறங்கி நதியில் நீராடி மகிழ்ந்து மீண்டும் கைலாயம் சென்றனர்.

சிவனும், பார்வதியும் நதியில் நீராடிய நாள் தைத்திங்கள் பூச நட்சத்திர வேளையாகும். அதனால் இதைப் போற்றும் வகையில் மாவட்டத்தில்  சப்த ஸ்தலங்களில் வீற்றிருக்கும் சிவாலங்களிலில் இருந்து அம்பாள், சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி வந்து வெள்ளாற்றில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் விழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந் நன்னாளில் புதுமணத்தம்பதிகள் நீராடினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான தம்பதிகள் இங்கு வந்து நீராடுவது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக, நிகழாண்டில் வியாழக்கிழமை புதுக்கோட்டை வெள்ளாற்றங் கரையில் நடைபெற்ற தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சியில்,  திருவேங்கைவாசல் பெரியநாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர், திருக்கோகர்ணம் பிரஹதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர்,  புதுக்கோட்டை சாந்தநாதர் சமேத வேதநாயகி அம்பாள், கோட்டூர் மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர், விராச்சிலை சௌந்தர நாயகி சமேத வில்வ வனேஸ்வரர் ஆகிய ஆலயங்களில் இருந்து சப்பரத்தில் எடுத்துவரப்பட்ட உற்சவ மூர்த்திகள் வெள்ளாற்றில் தீர்த்தமாடும் வைபவம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், புதுமணத் தம்பதிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஏற்பாடுகளை,  இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள் , திருக்கோயில் நிர்வாகிகள்,  செயல் அலுவலர் பாரதிராஜா    உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் மாரிமுத்து, ராமகிருஷ்ணன், தெட்சணாமூர்த்தி, அறங்காவலர் குழு  பழனிவேலு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.     

Top