logo
அதிமுக. ஆட்சியில் சத்துணவு திட்டஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

அதிமுக. ஆட்சியில் சத்துணவு திட்டஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

28/Jan/2021 04:06:06

 புதுக்கோட்டை,ஜன: புதுக்கோட்டையில் மாவட்டத்தலைவர் கே .சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற  தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்:  39 ஆண்டு காலமாக நடந்துவரும் சத்துணவு திட்டத்தில்  பணிபுரியும்  சத்துணவு ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் சத்துணவு திட்டஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த பட்ச  ஊதியத்தை ரூ. 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.  37 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு  மாதம் ரூ .2000/- ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பணிக்கொடையாக ரூ. 1,00,000  (ஒரு இலட்சம் ) மட்டும் வழங்கப்படுகிறது. இதனை   ஓய்வூதியமாக ரூ. 7 ஆயிரமாகவும்  பணிக்கொடை ரூ. 5 லட்சமாகவும்  உயர்த்தி வழங்க வேண்டும்.  சமையலர்களுக்கு மாத ஊதியம் ரூ. 10 ஆயிரமாகவும், உதவியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ. 7 ஆயிரமாகவும், உயர்த்தி வழங்க வேண்டும்.

 சத்துணவு- அங்காடி  ஊழியர்களின்  கோரிக்கைகளை முன் வைத்து தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே சத்துணவு ஊழியர்களின்  வாக்குகளும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த  10 லட்சம்   வாக்குகளையும் அளிப்பது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்   சத்துணவு  ஊழியர்களுக்கான பணப் பயன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை .வெவ்வேறு ஒன்றியங்களில் வெவ்வேறான காலக்கட்டங்களில் வழங்கப்படுகிறது.

ஒய்வு காலப்  பலன்கள் உள்ளிட்டவைகள் உரிய காலக்கட்டத்தில் வழங்கிட மாவட்ட  ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளர் ஆர்.கல்யாணசுந்தரம் உறுப்பினர் சேர்க்கையின் அவசியம் குறித்து பேசினார். முன்னதாக  மாவட்டச் செயலாளர் எஸ்.அம்பிகாபதி  தீர்மான நகலை  வெளியிட்டார். நிர்வாகி  வள்ளிக்கண்ணு அதை  பெற்றுக்கொண்டார்.     

 நிர்வாகி கல்யாணசுந்தரம்  முன்னிலை வகித்தார். கறம்பக்குடி ஒன்றிய செயலாளர்  ராஜேந்திரன்   வரவேற்றார். புதுக்கோட்டை  ஒன்றியதலைவர்  தங்கமணி நன்றி கூறினார்.  இதில், மாவட்ட ஒன்றிய  நிர்வாகிகள் நாகராஜன், ராஜேந்திரன்  உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Top