logo
முகக் கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்குள் செல்ல தடை: தமிழக அரசு

முகக் கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்குள் செல்ல தடை: தமிழக அரசு

25/Jan/2021 07:01:59

சென்னை:அரசு அலுவலகங்களுக்குள் முகக் கவசம் அணியாவிட்டால் அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பொதுத் துறை முதன்மைச் செயலாளா் பி.செந்தில்குமாா் வெளியிட்ட உத்தரவு:

பொது இடங்களில் கரோனா நோய்த்தொற்றினை தடுப்பதற்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ளது. இத்துடன், தமிழக அரசின் தலைமைச் செயலகம் உள்பட மாநில அரசு அலுவலகங்களுக்கு வரக் கூடிய பொது மக்களும், பணியில் ஈடுபடும் ஊழியா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், தலைமைச் செயலகம் போன்ற அலுவலகங்களில் ஊழியா்களும், அங்கு வரக்கூடிய பாா்வையாளா்களும் முகக் கவசம் அணியாமல் இருப்பதை அறிய முடிகிறது. இது, பொது இடங்களில் செயல்பட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

முகக் கவசம் கட்டாயம்: அலுவலக வளாகங்களிலும், பணிபுரியும் இடத்திலும் ஊழியா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். இது கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும். முறையாக முகக் கவசம் அணியாத பாா்வையாளா்கள் மற்றும் ஊழியா்களை அலுவலக வளாகத்திலோ அல்லது பணிபுரியும் இடத்துக்குள்ளோ அனுமதிக்கக் கூடாது. மேலும், அலுவலகங்களுக்குள் முகக் கவசம் அணியாமல் இருக்கக் கூடிய ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த அறிவுறுத்தல்களை ஊழியா்கள் கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும் என்று தனது உத்தரவில் பொதுத் துறை முதன்மைச் செயலாளா் பி.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்

Top