logo
திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமாரின்  முதல்நாள் பிரசாரத்தின் போதே கிளம்பிய எதிர்ப்பால்  பரபரப்பு

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமாரின் முதல்நாள் பிரசாரத்தின் போதே கிளம்பிய எதிர்ப்பால் பரபரப்பு

14/Mar/2021 12:47:54

திருமங்கலம், மார்ச்: மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுகியில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 2-ஆவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது, அமைச்சர் நல்லவர், சூதுவாது தெரியாதவர், சம்பாதித்த பணத்தில் பாதிக்கு மேல் மக்களுக்கு செலவழிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர் என்ற கருத்து உள்ளது.

 அண்மையில், திருமங்கலம் அருகில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தனது செலவில் கோயில் கட்டி, குடமுழுக்கு விழா நடத்தியுள்ளார். கோயில் கட்டும் அளவுக்கு அவர் பெற்றிருக்கும்பொருளாதார வளர்ச்சி, கடந்த பத்தாண்டுகளில் கிடைத்ததுதான் என்றும் அவரது நலம் விரும்பிகள் கூறுகின்றனர். 


இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதன்முதலாக தனது தொகுதிக்குள்  தொடங்கிய பிரசாரம் த்தை தொடங்கினார்.  கப்பலூரில் வாக்குசேகரிக்கச்சென்ற  அவர் அதற்கு முன்பாக அங்குள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி. உருவச் சிலைக்கு மாலையணிவிக்க, படை பரிவாரங்களோடு சென்றார். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வ.உ.சி. சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்,  சிலைக்கு மாலையணிவிக்க முடியாதபடி  அந்த பீடத்தையே பூட்டி வைத்துவிட்டனர். 

அவர்களின் எதிர்ப்புக்கும் கோபத்துக்கும்  காரணம், அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் சாதி அடையாளமான வேளாளர் என்ற பட்டத்தை தேவேந்திர குல வேளாளர்  என்ற பெயர் மாற்றத்துக்கு   மத்திய, மாநில அரசுகளும் அங்கீகாரம் வழங்கியதே முக்கிய காரணம்.  எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகிக்கு மாலையணிவிக்காதே… திரும்பி போ என்று முழக்கமிட்டு அமைச்சரவை  பிரசாரம் செய்ய விடாமல் திருப்பி அனுப்பினர்.அவர்களிடம் சமாதானம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வ.உ.சி.க்கு வெண்கலத்திலான முழு உருவ சிலையை அமைத்து தருகிறேன் என்ற வாக்குறுதியை அறிவித்தார். ஆனால் பிரசாரத்தின் தொடக்கமே அபசகுணமாக முடிந்தது.

இரண்டாவது நிகழ்வு, அதே தொகுதியில் போட்டியிடும் அமமுக கூட்டணி வேட்பாளரும் மருது சேனை தலைவருமான ஆதிநாராயணின் ஆவேசப் பேச்சும்தான், திருமங்கலம் தொகுதியில் அனலை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் போல திருமங்கலம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம், உதயகுமாருக்கு எதிராக கடுமையாக சாடினார். 

முக்குலத்தின் துரோகி உதயகுமார். அவரை தோற்கடித்து திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலை சுவற்றில் கட்டி வைப்பேன். யார், யாருக்கு தைரியம் உள்ளதோ, அவர்கள் வந்து உதயகுமாரை அழைத்துச் செல்லட்டும் என்று கண்கள் சிவந்தார். அதை விட அவர் உக்கிரமாக சொன்னதுதான். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 5000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருக்கிறார் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ள சொத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டினார். 

பிரசாரத்தின் முதல்நாளே, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக வெள்ளாளர், வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும், முக்குலேத்தோர் சமுதாய மக்களும் கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கிறது. அமைச்சருக்கு எதிராக என்னென்ன பிரச்னைகள் வெடிக்குமோ என்ற அச்சத்தில் அப்பாவி வாக்காளர்கள் பயத்தில் இருக்கிறார்கள். ஆனால், திருமங்கலம் பார்முலா இந்தத்தேர்தலில் எந்த அளவுக்கு வேட்பாளர்களுக்கு கைகொடுக்கும் என்பதே மாபெரும் கேள்வி.

Top