logo
விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்

விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்

22/Jan/2021 12:16:18

புதுக்கோட்டை-ஜன:  விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்கள் அனைவரும்  கடைப்பிடிக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே. சரவணன்.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 32 -ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு  தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர வாகன மகளிர் பேரணியினை  (21.01.2020) கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் மேலும் அவர் கூறியதாவது: சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும்  நோக்கில்  ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் விபத்தில்லா நாடு என்ற நிலையினை அடையும் வகையில் இந்த ஆண்டு 32 -ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 1 மாதத்திற்கு  கடைபிடிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்காம் நாளான வியாழக்கிழமை சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில்  இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து மகளிர் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இப்பேரணியில்  அரசு போக்குவரத்துத்துறை மகளிர் பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், இருசக்கர வாகன விற்பனை மையங்களின் மூலம் இருசக்கர வாகனம் பெற்ற மகளிர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

 சாலை பயன்படுத்துவோர், அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான இப்பேரணி  புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் தொடங்கி அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், திலகர்திடல், பால்பண்ணை, கே.கே.சி கல்லூரி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு பொது அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. 

மேலும் விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தவறாது சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க முன் வரவேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர்பெ.வே.சரவணன்.

இப்பேரணியில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பி.கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் சி.கே.ஜெயதேவ்ராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோ, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தங்கராஜ், கருப்பசாமி, சசிக்குமார்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Top