logo
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

12/Jan/2021 01:23:37

ஈரோடு: நிகழாண்டில் தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதிமுகவில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மாவட்டம் வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

அதே போல் திமுகவில் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். இதே வேளையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானிசாகர் என மொத்தம் 8 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கி உள்ளன. 

ஈரோடு மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக விளங்கி வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு ஈரோடு மாவட்டம் எப்போதும் கை கொடுத்து வருகிறது. கடந்த கால சட்டப் பேரவை தேர்தல்களில்  வேட்பாளர் அறிவிப்பில் ஜெயலலிதா அதிரடியான முடிவுகளை எடுத்து நூறு சதவீத வெற்றியை ஈட்டிக் காட்டினார்.

 ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகளிடையே  எழுந்துள்ளது. அதே நேரத்தில், இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கினால், தேர்தலில் இளைஞர்களின் ஓட்டுகளை அதிக அளவில் கவர வாய்ப்பாக இருக்கும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து அதிமுக  நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

ஜெயலலிதா  மறைவுக்கு பிறகு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், தேர்தல் பணியில் கட்சி நிர்வாகிகள் எப்படி ஈடுபாடு காட்டுவார்கள் என்பது தெரியவில்லை. மேலும், வேட்பாளர்கள் பட்டியலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். காரணம், கேரளாவில் கம்யூனிட்டு சார்பில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டதால், அங்கு பலர் அபார வெற்றி பெற்று  மேயர் முதல் ஊராட்சி தலைவர் வரையுள்ள பதவிகளுக்கு வந்துள்ளனர்.

 அதை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் நல்லது. மேலும்,  இளைஞர்களை கவர வாய்ப்பாக  அமையும். வரும் தேர்தலில் இளைஞர் சக்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆகையால், அதிமுகவில் ஜெ- பேரவை, எம் ஜி ஆர் இளைஞர்  அணி, இளைஞர், இளம் பெண்கள் பாசறை போன்ற சார்பு அணிகளில் உள்ள செல்வாக்கு,  பொதுமக்களிடம் பரவலாக நன்மதிப்பைப் பெற்றுள்ள  இளைஞர்களுக்கு வாய்ப்பு  வழங்க வேண்டும் என்றனர். நிருபர் சி.ராஜ்- ஈரோடு.


Top