logo
கொரோனா  தடுப்பு ஊசி:   முன்களப் பணியாளர்கள் 6,849 பேருக்கு வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கொரோனா தடுப்பு ஊசி: முன்களப் பணியாளர்கள் 6,849 பேருக்கு வழங்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

11/Jan/2021 11:58:49

புதுக்கோட்டை-ஜன:  புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக  மாவட்டத்திலுள்ள  முன்களப் பணியாளர்கள் 6,849 பேருக்கு கொரோனா  தடுப்பு ஊசி  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற   மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்கு ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்து  பேசியதாவது:

தமிழக அரசு கொவைட் -19 நோய் தொற்றிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் தீவிரமாக களப்பணியாற்றும் மருத்துவப் பணியாளா;கள் மற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பிற்கென  தடுப்பு ஊசி வழங்கும் திட்டம் வருகிற 16.1.2021 -இல் தொடங்கவுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடுப்பு ஊசி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்,  தடுப்பு ஊசி வழங்கும் திட்டத்திற்கு முன்கள பணியாளர்கள் விவரங்கள்  தடுப்பு ஊசிக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 91 அரசு மருத்துவமனைகளில் 4,587 முன்கள பணியாளர்களும், 378 தனியார் மருத்துவமனைகளில் 1,489 முன்கள பணியாளர்கள் உள்பட  மொத்தம் 6,076 சுகாதார முன்களப் பணியாளர்கள் மற்றும்   773 முன்களப்பணியாளர்களின் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கோவிட்-19 தடுப்பு மருந்தை சரியான குளிர்பதன நிலையில் பராமரிப்பதற்கான 225 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 குளிர் பதனப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் 95, 400 (தவணை) மருந்து குப்பிகளை பாதுகாக்க முடியும். மேலும் 0.5மி.லி ஊசி குழல்கள் 60,500 எண்ணிக்கையில் கோவிட்-19 தடுப்பு மருந்து  அளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. இம்முகாம் குறித்து 868 மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்களப்பணியாளர்களுக்கான கோவிட்-19 தடுப்பு ஊசி முகாமினை சிறப்புற நடத்துவதற்கான ஒத்திகை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துமனை அறந்தாங்கி, அரசு மருத்துமனை விராலிமலை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்; அரிமளம், திருவரங்குளம், பொன்பேத்தி, டீம் மருத்துவமனை புதுக்கோட்டை, எம்.எஸ். மருத்துவமனை, அறந்தாங்கி, அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்; கோவில்பட்டி, அறந்தாங்கி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இதேபோன்று,  கோவிட்-19 தடுப்பு ஊசி சிறப்பு முகாம்  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அறந்தாங்கி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ,  விராலிமலை, இலுப்பூர், கந்தர்வகோட்டை, ஆலங்குடி அரசு மருத்துவமனைகள், அண்டக்குளம், நச்சாந்துப்பட்டி, திருவரங்குளம், நாகுடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்  மற்றும் , புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை போன்ற இடங்களில்  நடத்தப்படவுள்ளது. 

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி முகாமினை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் திறம்பட நடத்தி முடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர். முன்னதாக  கொரோனா தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசார ஊர்திகளை  கொடியசைத்து ஆட்சியர் தொடங்கி வைத்தார். 

இக்கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொதுசுகாதார துணை இயக்குநர்கள்  பா.கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். 


Top