logo
கோபிசெட்டிபாளையம் பாரியூர்  கொண்டத்துக்காளியம்மன் மலர் பல்லக்கு ஊர்வலம்

கோபிசெட்டிபாளையம் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் மலர் பல்லக்கு ஊர்வலம்

11/Jan/2021 09:49:58

ஈரோடு- ஜன: கோபிசெட்டிபாளையம் பாரியூரிலுள்ள  பிரசித்தி பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோயில் தேர் திருவிழாவில் மலர் பல்லக்கு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மலர் பல்லக்கில் வந்த அம்மனை தரிசனம் செய்தனர். 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் குண்டம் தேர் திருவிழா ஒவ்வொருஆண்டும் ஜனவரி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், நிகழாண்டின் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு அரசுஅனுமதி மறுக்கப்பட்டநிலையில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும்  வீரமக்கள் திருவிழா நடத்தாமல் இருக்கக்கூடாது எனஅமைச்சர் செங்கோட்டையிடம் முறையிட்டனர். 

இதையடுத்து அமைச்சரின்  அறிவுறுத்தலின்படி பக்தர்கள் இல்லாமல் திருவிழாவை நடத்திக் கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அனுமதியளித்தது. அதன் அடிப்படையில் கடந்தமாதம் 24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைதொடர்ந்து இம்மாதம் 4-ஆம் தேதி சந்தனக்காப்பு  அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 7-ஆம் தேதி(வியாழக்கிழமை) குண்டம் திருவிழாவில் பூசாரிகள் மற்றும் வீரமக்கள் உட்பட 80 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். 

ஒவ்வொருஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தி வந்த நிலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால்  கோயில் பூசாரிகள் மடடுமே குண்டம் இறங்கி திருவிழாவை முடித்தனர்.  8-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற  தேர்த் திருவிழாவில் சொற்ப அளவிலான பக்தர்களே தேரைவடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை நடத்தினர்.

9- ஆம் தேதி(சனிக்கிழமை) மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்ட பல்லக்கில் அம்மன் வீதி  உலா வரும் நிகழ்வைக்காண  பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் இல்லாததினாலும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. 

மலர் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டஅம்மன் ஊர்வலம் பாரியூர் கோயிலில் தொடங்கிவெள்ளாளபாளையம்   பிரிவு, சாணார்பதி, முருகன்புதூர், மேட்டுவலவு, பேருந்துநிலையம் வழியாக சென்றுகோபிசெட்டிபாளையம் நகராட்சிபகுதியில் உள்ள தெப்பக்குளம் சென்றடைந்தது. இங்குஅம்மனுக்குசிறப்புபூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கோயில் வளாகத்தை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது.

 அம்மன் மலர் பல்லக்கு நிகழ்வில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பிவ் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் சார்பில் 100-க்கும் மேற்பட்டகாவலர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

வரும் 16-ஆம் தேதி மறு பூஜையுடன் திருவிழா முடிவடைகிறது. ஓவ்வொருஆண்டும் இத்திருவிழாவிற்கு ஏராளமான கடைகள் இராட்டினங்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் காங்கேயம் காளைகள் கண்காட்சி எனதிருவிழா களைகட்டி காணப்படும் நிலையில்  கொரோனா தொற்று காரணமாக  கோயில் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. 


Top