logo
கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

10/Jan/2021 09:15:41

சென்னை: முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை ஏற்பதாகவும், கூட்டணியை இறுதி செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிகாரம் வழங்குவதாகவும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. கடந்த 2 பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த அதிமுக இப்போது 3-ஆவது முறையாக வெற்றி பெற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக.வின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் அதிமுக வின் செயற்குழு- பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் வந்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரை தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும் வந்தார்.அப்போது தொண்டர்கள் எடப்பாடி வாழ்க ஓ.பி.எஸ். வாழ்க வெற்றி நமதே நாளையும் நமதே என்று முழக்கமிட்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்திருந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பொதுக்குழு கூட்டத்துக்கு அவை தலைவர் இ.மதுசூதனன் தலைமை வகித்தார். முதலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். அதன்பிறகு மறைந்த அதிமுக. நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மதுசூதனன் கொண்டு வந்தார்.இதையடுத்து அதிமுக. உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்து தோழமை கட்சிகளுடன் பேசவும், தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்கவும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் முழு அதிகாரம் வழங்குவது உள்பட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானம் விவரம் வருமாறு:

அ.தி.மு.க. 2011-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் புரட்சித்தலைவி வழியில், அவர் அமைத்து தந்த கழக அரசும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம்பெற ஏராளமான பணிகளை திறம்பட ஆற்றி, நாட்டிலேயே முதன்மை மாநிலம் என்னும் நற்பெயரையும், மத்திய அரசின் பல விருதுகளையும் பெற்றிருக்கிறது.

மக்கள் மனதில் நல்லாட்சி என்னும் புகழைப் பெற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு 2021-ஆம் ஆண்டு மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிடத் தேவையான வியூகங்களை வகுக்கவும், அதிமுக. தலைமையில் வெற்றிக் கூட்டணியை உருவாக்கவும், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டினை முடிவு செய்யவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தப் பொதுக்குழு முழு அதிகாரத்தை அளிக்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பிறகு தலைமைக் கழக மூத்த நிர்வாகிகள் பொதுக்குழுவில் பேசினார்கள். அதைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் லஆகியே விரிவாக பேசினர்.இறுதியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  பேசினார்கள்.

வருகிற தேர்தலில் அம்மா ஆட்சி மீண்டும் அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கூட்டணி வி‌ஷயத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். மக்களுக்கு நாம் நிறைய திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம். அவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று தங்களது பேச்சில் குறிப்பிட்டனர்.

பொதுக்குழுவில் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள். மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள்  தேர்தல் கூட்டணி குறித்து விரிவாக விவாதித்தனர்.அதிமுக தேர்தல் அறிக்கை குறித்தும்  ஆலோசித்து முடிவு செய்யப்படுகிறது. இது தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Top