logo
சென்னையில் 413 சதுரஅடியில் ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை, பால்கனியுடன்  1152 வீடுகள்: பிரதமர் மோடி அடிக்கல்

சென்னையில் 413 சதுரஅடியில் ஒரு படுக்கை அறை, சமையலறை, கழிவறை, பால்கனியுடன் 1152 வீடுகள்: பிரதமர் மோடி அடிக்கல்

03/Jan/2021 12:23:45

புதுதில்லி, ஜன: அனைவருக்கும் வீடு  திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்படும் 1,152 வீடுகளுக்கு காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

அடுத்த ஆண்டு (2022)க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக, பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

வீடு கட்டும் திட்ட தொடக்க விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.116.27 கோடி செலவில் 1,152 வீடுகள் கட்டப்படவுள்ளன. இவற்றை அடுத்த 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம் ஆகும். மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம் ஆகும். பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் ஆகும்.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலும், பேரிடரை தாங்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பத்தில் 413 சதுர அடியில் ஒரு படுக்கையறை, சமையலறை, கழிவறை, பால்கனி உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன.

நகர்ப்புற குடிசைப் பகுதியில் 14.63 லட்சம் குடும்பம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 

இந்த வீடுகள் கட்டும் திட்டத்தில் 6 மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இடம் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் மிகவும் நகர்ப்புறமயமான மாநிலம் தமிழ்நாடு. இங்கு மொத்த ஜனத்தொகையில் 48.45% மக்கள் நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இதில் 14.63 லட்சம் குடும்பங்கள் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வசிக்கிறார்கள். 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை குடிசைகளே இல்லாத நகரங்களாக உருவாக்குவதே புரட்சித்தலைவி அம்மாவின் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 23 ஆகும்.

இப்படி உருவாக்கப்படும் வீடுகளில் ஒரு படுக்கை அறை, ஒரு ஹால், ஒரு சமையல் அறை, கழிவறை, பால்கனி ஆகியவை (குறைந்த பட்சம் 400 சதுர அடி பரப்பில்) இருக்க வேண்டும் என்பது அம்மாவின் எதிர்பார்ப்பு, லட்சியம். இந்த வீடுகளில் மின்விசிறிகளும், மின்சார சாதனங்களும் இருக்க வேண்டும் என்பதும் அம்மாவின் ஆசை.


கூடுதலாக  ரூ.70,000: சமீபத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலித்தேன். ஒரு வீட்டுக்கு ஆகும் உத்தேச செலவுத் தொகை போதுமானதாக இருக்காது என்று உணர்ந்தேன். கொரோனா பாதித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விலைகள் உயர்ந்திருக்கும் சூழ்நிலையில் என்ன தான் சிக்கனமாக திட்டமிட்டாலும் அது சரியாக இருக்காது என்று உணர்ந்த நிலையில் ஒவ்வொரு வீட்டுக்கும் கூடுதலாக ரூ.70,000ஐ வழங்கியிருக்கிறேன்.

ஒரு வீட்டிற்கு ஆகும் செலவு தொகையை  .1.70 லட்சத்திலிருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தி இருக்கிறேன். இதன் மூலம் 2½ லட்சம் வீடுகள் கட்டித் தருவதற்கு ரூ.1805 கோடி செலவாகும்.பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ் 1,62,720 மாடி குடியிருப்புகளும், 3,42,769 தனி வீடுகளும் மொத்தம் ரூ.27000 கோடியில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை, பால் பூத், நூலகம்: பெரும்பாக்கத்தில் கட்டப்படும் வீட்டுப் பகுதியில் ஒரு ரேஷன் கடை, 2 அங்கன்வாடி மையங்கள், ஒரு நூலகம், பால் பூத் மற்றும் 6 கடைகள் உள்ளிட்ட சமூக வசதிகள் இருக்கும். வடிகால் சுத்திகரிப்பு நிலையமும், மின்சார துணை நிலையமும், அமைக்கப்படும்.

நீர்நிலைகளின் கரையோரங்களில் வசிக்கும், சென்னை நகரில் ஆட்சேபணைக்குரிய நிலைங்களில் வசிக்கும் மக்களுக்கு நகர்ப்புற ஏழை / குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இந்த வீடுகள் ஒதுக்கப்படும். இத்தகைய திட்டங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதில் தமிழ்நாடு அரசு மகிழ்கிறது.இவ்வாறு எடப்பாடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, நவரித் (இந்திய வீட்டுவசதிக்கான புதிய, கட்டுப்படியாகக் கூடிய, சரிபார்க்கப்பட்ட, புதுமை ஆராய்ச்சித் தொழில்நுட்பங்கள்) என்னும் புதுமையான கட்டுமான தொழில்நுட்பங்களுக்கான சான்றிதழ் கல்வியையும் பிரதமர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

மேலும், சர்வதேச வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் - இந்தியாவால் அடையாளம் காணப்பட்டுள்ள 54 புதுமையான வீட்டுவசதிக் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டையும் அவர் வெளியிட்டார். திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதம மந்திரி வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் கீழ், உலக அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சென்னையில் மாதிரி வீட்டுவசதி திட்டமாக சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 116.27 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டிய விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

விழாவில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Top