logo
மதுரைக்குள் நுழைந்து விட்டதா  லண்டன் கொரோனா? 29 பேரை சோதித்ததில் ஒருவருக்கு பாதிப்பு எஞ்சிய 59 பேரை தேடும்பணி தீவிரம்

மதுரைக்குள் நுழைந்து விட்டதா லண்டன் கொரோனா? 29 பேரை சோதித்ததில் ஒருவருக்கு பாதிப்பு எஞ்சிய 59 பேரை தேடும்பணி தீவிரம்

29/Dec/2020 11:19:29

மதுரை, டிச:இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது என்ற தகவல் நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தடைந்த நபர்கள் குறித்த தரவுகளை எடுத்து, அவர்களைத் தீவிரமாக அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த தேடுதல் வேட்டைக்கு இடையில், இங்கிலாந்திலிருந்து மதுரை வந்தடைந்த 38 வயதாகும் நபர் ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இன்னும் யாரெல்லாம் இங்கிலாந்திலிருந்து வந்துள்ளார்கள் என்ற தகவலே வெளியாகாத நிலையில், இப்படி ஒரு அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா பரிணாம குறைந்த காலத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வடிவத்தில் தனது தாக்குதலை முன்னெடுக்கும் கொரோனா, கொடிய ஆபத்துகளை விளைவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக இங்கிலாந்து அமைந்துள்ள ஐரோப்பியக் கண்டத்திலிருந்து கடந்த நவம்பருக்குப் பிறகு வந்தவர்களை அதிகாரிகள் மாவட்டந்தோறும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட தரவுகளின்படி மதுரைக்கு 88 பேர் இந்த குறிப்பிட்ட காலத்தில் இங்கிலாந்து உள்பட ஐரோப்பியக் கண்டத்திலிருந்து வந்துள்ளனர்.மதுரை வந்தடைந்த 88 பேரில் 29 பேரை ஒருவழியாக அதிகாரிகள் கண்டறிந்துவிட்டனர்.இதையடுத்து இந்த 29 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் 38 வயதாகும் ஒருவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், இங்கிலாந்து தலைநகர் லண்டனிலிருந்து கடந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதி மதுரை வந்தடைந்தார்.அவர் உடலில் இருப்பது புதிய கொரோனா உருவமா என்பதை உறுதி செய்யப் பாதிக்கப்பட்ட நபரிடம் எடுக்கப்பட்டுள்ள பரிசோதனை மாதிரிகள், பூனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை அந்த நபர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

அதேபோல் இப்போதைய நேரத்தில் வெளிநாடு சென்று மதுரை திரும்புபவர்களை அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அவர்கள் முறையாகத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது


Top