22/Dec/2020 10:48:49
ஈரோடு, டிச:பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி செய்யும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெருந்துறை - கோவை பிரதான சாலையில் மடத்துப்பாளையம் பிரிவு அருகே ஒரு கடை முன்பு ஈங்கூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த முதியவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
அவர் கொடுக்க மறுத்ததால் அந்த முதியவரை வாலிபர் தாக்கி கீழே தள்ளி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயல்கிறார். அப்போது இன்னொரு வாலிபரும் உடன் சேர்ந்து கொண்டு அந்த முதியவர் அங்கிருந்து செல்ல முடியாதபடி மடக்கிப் பிடித்து அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.22 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
அந்த முதியவர் அவர்கள் பின்னால் ஓடுகிறார். இந்த சம்பவம் அனைத்தும் அந்தக் கடையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்தப் பகுதிகளில் இது போன்று அடிக்கடி வழி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். மேலும் இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.