logo
மனிதனும் தெய்வமாகலாம்...கடவுள் போல மக்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு கோயில் கட்டி வழிபாடு

மனிதனும் தெய்வமாகலாம்...கடவுள் போல மக்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு கோயில் கட்டி வழிபாடு

21/Dec/2020 09:44:20

ஹைதராபாத் : கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி செலுத்தும் விதமாக ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏழை, எளிய மக்களுக்கும், மலைக்கிராமத்தினருக்கும் தொடர்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறார் சோனு.

 கொரோனா கொடுங்காலத்திலும் கூட, சொத்துக்களை அடகுவைத்தும் உதவிகள் செய்து வருகிறார். ஊரடங்கினால் அவதிப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுத்திருக்கிறார் சோனு.

வெளிநாட்டில் தவித்த மருத்து மாணவர்கள் தமிழகம் திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்தவர் சோனு. ஆன்லைன் படிக்க டவர் வசதி இல்லாத மலை கிராமத்திற்கு டவர் அமைத்துக்கொடுத்தவர். இன்னும் போனிலும், கடிதம் மூலமாகவும் உதவி கேட்போருக்கு சோனு சூட்டின் உதவிக்கரம் நீண்டுகொண்டே இருக்கிறது.

அவரின் இந்த மனிதாபிமானத்தை பார்த்துதான், ஐநாவும் அவருக்கு விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.  இந்த நிலையில் சோனு சூட்டின் சேவையை பாராட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டியுள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்திலுள்ள துபண்டா தந்தா கிராம மக்கள் சோனு சூட்டுக்கு சிலை எழுப்பி கோயில் கட்டியுள்ளனர். மேலும் கோயிலை அலங்கரித்து தீபாரதனை காட்டியும், பெண்கள் பாரம்பரிய உடையணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடியும் வழிபட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த கிராம மக்கள், தனது சிறப்பான செயல்கள் மூலம் சோனு சூட் கடவுள் இடத்தை அடைந்துவிட்டார். அதனால்தான் அவருக்கு நாங்கள் கோயில் கட்டியுள்ளோம். அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்


Top