logo
மன் கி பாத்தில் பிரதமர் பேசும்போது பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புங்கள்: விவசாயிகள் வலியுறுத்தல்

மன் கி பாத்தில் பிரதமர் பேசும்போது பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புங்கள்: விவசாயிகள் வலியுறுத்தல்

21/Dec/2020 12:22:46

 புதுதில்லி: மன் கி பாத் நிகழ்ச்சிக்காக டிசம்பர் 27-ம் தேதி  பிரதமர் பேசும்போது நாட்டு மக்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்புமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 25-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் சிங்கு எல்லையில் விவசாயிகள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது விவசாயிகள் தெரிவித்தது: டிசம்பர் 27-இல் மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, பிரதமர் பேசி முடிக்கும் வரை பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்ப வேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். விவசாயத் தலைவர் ஜஸ்பீர் சிங் பேசியது: விவசாயிகள் குறித்து அவதூறு பரப்ப அரசு முயற்சிக்கிறது. குளிர் நிறைந்த இரவுகளில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். அரசு எங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால், எங்கள் மீது அவதூறு பரப்புவதில் மும்முரமாக உள்ளனர். ஈகோவைக் கைவிடுமாறு வேளாண் துறை அமைச்சரையும், மத்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களும், குழந்தைகளும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிராந்திகாரி விவசாயிகள் சங்கத்தின் தர்ஷன் பால் சிங் கூறியது:இந்த சமூகத்துக்கு அச்சுறுத்தலானவர்கள் என்பதைப்போன்ற தோற்றத்தை உண்டாக அரசு முற்படுவதை கண்டிக்கிறோம். அதை நிறுத்த வேண்டும்.

ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தது: விவசாயிகளின் உணர்வுதான் தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட ஊக்கமளித்தது. ராஜஸ்தான் மற்றும் பிற நகரங்களிலிருந்து மக்கள் வருகின்றனர். விவசாயிகளைத் தடுத்து நிறுத்தும் ஹரியாணா அரசின் செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுமாறு ஹரியாணா அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொரு விவசாயத் தலைவர் ஜக்ஜீத் சிங் பேசியது:அனைத்து விவசாயத் தலைவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளைச் சந்தித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி அரசைக் கட்டாயப்படுத்துமாறு கேட்டுக்கொள்ள இருக்கிறோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அவர்களையும் புறக்கணிப்போம்.

Top