logo

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஈரோட்டில் நாளை முதல் தொடர் காத்திருப்பு போராட்டம்

12/Dec/2020 10:41:59

ஈரோடு- டிச: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில்  திங்கட்கிழமை  முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானித்துள்ளனர்.

ஈரோட்டில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை  நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு செயற்குழு உறுப்பினர் முனுசாமி தலைமை வகித்தார்.  நிர்வாகிகள் சி.எம்.துளசிமணி, பொன்னையன், சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி சி.எம்.துளசிமணி நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அவர்களிடம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் நிறைவடையும் வரை, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

அதன்படி, ஈரோடு அரசு  மருத்துவமனை  ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் இடத்தில் வருகிற 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இந்த போராட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


                                                   

        


Top