logo
மதிலழகு விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்...

மதிலழகு விரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோவில்...

12/Dec/2020 07:50:39

வேலூர்: தமிழ் நாட்டின் அழகில் சிறந்த கோயில்கள் ஜந்து என்பர். திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் வீதி அழகு, வேதாரண்யம் விளக்கு அழகு, சுசீந்திரம் கோபுர அழகு,  திருவிரிஞ்சை மதிலழகு என்று பெயர் பெற்ற இத்தலம் வேலூர் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஒன்று.

1300 ஆண்டுகளுக்கு  முற்பட்ட நந்தி விக்கிர பல்லவர் கல்வெட்டுகள், மேலும் பராந்தகர், இராஜாராஜர், இராஜந்திரர், குலோத்துங்கன், சம்புவரையர்கள்,விஜய நகர அரசர்கள், வேலூரை ஆண்ட அச்சுத்தேவராயர் கல்வெட்டுகள் காண கிடைக்கிறது. அப்பர்,திருமூலர், பட்டினத்தார், சம்பந்தர், அருணகிரியார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

அடி முடி காணும் போட்டியில் பொய் கூறிய பிரம்மாவின் தலை கொய்யபட்டவுடன் அவர் இறைவியை வேண்ட, இத்தலத்து இறைவனை நோக்கி தவமியற்றுமாறு கூறினார்,பிரம்மன் சாபம் போக்க பிரம்மனை இங்கே மானிட பிறப்பாக பிறக்க வைத்தார் ஈசன்.சிவசர்மன் என்ற பெயரில் பிறந்த பிரம்மா சிறுவனாக இருந்ததால் லிங்கத்துக்கு (லிங்கம் மிக உயரமான இருந்ததால்) நீறுற்ற முடியவில்லை, தன் ஊழ்வினை தவற்றை உணர்ந்து, பிரம்மா இறைவனை வேண்ட அவரும் தனது முடியை சாய்ந்து கொடுக்கிறார். 

அண்ணாமலையில் இறைவனை காண முடியாத பிரம்மா இத்தலத்தில் தான் இறைவனை கண்டு சாப விமோசனம் பெற்றார் என்பது தல வரலாறு. இங்கே மூலவராக உள்ள லிங்கம் மற்ற தலம் போல் நேராக அல்லது சற்று முன்னோக்கி வளைந்துள்ளது.பிரம்மாவுக்கு போதித்து வழி காட்டியதால் மார்க்க சகாயர் என்றும், இத்தலத்து வழியாக செல்லும் வணிகர்களுக்கு வழித்துணையாக இருந்ததாலும் மார்க்கபந்தீஸ்வரர்,மற்றும் வழிதுண நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. 

110 அடியும், 7 நிலையும் உள்ள அழகிய கோபுரம், ஆலயத்தை சுற்றி மதில் சுவர் உயரமானவை,மிகவும் அழகானவை.இக்கோயில் திருமண மண்டபம், வேலூர் கோட்டை கோவிலின் திருமண மண்டபத்தின் அச்சு நிழல் பகர்ப்பு (Xerox).அழகிய சிற்ப வடிவங்கள் அலங்கரிக்கின்றன,பல அழகு தூண்கள் வண்ணம் பூசி அழகு குலைக்கப்பட்டுள்ளன.

மைல்கல் போன்ற கல்லில் சூரிய கடிகாரம், சிம்மகுளம்,1008 லிங்கம் கொண்ட ஒரே லிங்கம், பார்க்க வேண்டிய பகுதிகள்.தொண்டை மண்டலத்தில் பனை மரம் தல விருட்சமாக உள்ள இரண்டு தலத்தில் இதுவும் ஒன்று. இங்கே உள்ள பனைமரம் ஒரு ஆண்டில் வெண்மையாகவும், மறு ஆண்டு கருமையாக காய்ப்பது தனி சிறப்பு.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு அன்று குழந்தை பேறு வேண்டி பெண்கள் இந்தக் சிம்ம கிணற்றில் நீராடி ஈர உடையுடன் அங்கே உள்ள மண்டபத்தில் படுத்து உறங்குவர் இப் பெண்கள் கனவில் குழந்தையோ,பூக்களோ,வேறு மங்கல பொருள்களை கனவில் காட்சி தந்தால்,அவர்கள் விரைவில் கருத்தரிப்பர் என்பது இங்கே நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இங்கே சேரும் கூட்டமே அதற்கு சாட்சி,ஆச்சிரியமான விஷியம் இங்கே வரிசையாக படுத்துறங்க மண்டபமும் அதற்கேற்றார் போல் இரு வரிசையில் அக்காலத்திலே அமைக்கபட்டுள்ளது.

வேலூரில் இருந்து 13 கி.மீ, ஆம்பூர் செல்லும் வழியாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செதுவலை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ வடக்காக சென்றால் இத்தலத்தை அடையலாம். வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் இத்தலத்துக்கு இயக்கப்படுகின்றன. 

இறை நம்பிக்கை இல்லாதவர்களும் இங்கே உள்ள சிற்ப கருவூலத்தை காண செல்ல வேண்டும். 

Top